காசிமேடு சந்தையில் அதிகாரிகள் ஆய்வு 350 கிலோ தரமற்ற மீன்கள் பறிமுதல்
சென்னை:நம் நாளிதழ் செய்தியைத் தொடர்ந்து, காசிமேடு மீன் சந்தையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தி, 350 கிலோ தரமற்ற மீன்களை பறிமுதல் செய்தனர். இந்த சோதனை தொடரும் என, உணவு பாதுகாப்பு துறையினர் எச்சரித்துள்ளனர்.
சென்னை, காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், உள்ளூர் மீன்களுடன், தரமற்ற, ரசாயனம் பூசப்பட்ட, வெளி மாநில மீன்கள் கலந்து விற்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து, நம் நாளிதழ், நேற்று விரிவான செய்தி வெளியானது.
இதையடுத்து, உணவு பாதுகாப்பு துறையின், சென்னை மாவட்ட நியமன அலுவலர் சதீஷ்குமார் தலைமையிலான அதிகாரிகள் நேற்று, காசிமேடு மீன் சந்தையில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, ஒவ்வொரு கடைகளாக ஆய்வு செய்த அதிகாரிகள், குடோன்களில் வைக்கப்பட்டிருந்த மீன்களின் தரத்தையும் சோதனை செய்தனர். அதில், இறால், நண்டு, வவ்வால், சூறை, கடம்பா, வாலை, வஞ்சிரம் உள்ளிட்ட மீன்கள், தரமற்றதாக இருப்பது கண்டறியப்ப்டடது. அவற்றை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து, உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் சதீஷ்குமார் கூறியதாவது:
காசிமேடு சந்தையில் உள்ள கடைகள், குடோன்களில் ஆய்வு செய்தோம். கெட்டுப்போன, 350 கிலோ மீன்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. அவற்றை பறிமுதல் செய்து, பினாயில் ஊற்றி முறையாக அழிக்கப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட மீன்களில் இருந்து, ஆறு இடங்களில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இதன் முடிவுகள் கிடைக்க ஓரிரு வாரங்கள் ஆகும். பரிசோதனை முடிவுகள் வந்ததும், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
சுகாதாரமற்ற முறையில் மீன்களை விற்பனை செய்த இரண்டு கடைகளுக்கு தலா, 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, தரமற்ற மீன் விற்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
காசிமேடு மீனவர்கள் கூறுகையில், ‘உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஒரு நாள் ஆய்வு செய்துவிட்டு, நாங்கள் நடவடிக்கை எடுத்து விட்டோம் என்று கணக்கு காட்டி ஒதுங்கிவிடாமல், தொடர் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான், தரமற்ற மீன்கள் விற்பனையை கட்டுப்படுத்த முடியும்’ என்றனர்.