‘108 ஆம்புலன்ஸ்’ கட்டுப்பாட்டு அலுவலகத்தில்… வாயு கசிவு! : 14 ஊழியர்கள் அட்மிட் ; 3 பேருக்கு தீவிர சிகிச்சை
தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு துறையின் கீழ் செயல்படும், ‘108 ஆம்புலன்ஸ்’ அவசரகால கட்டுப்பாட்டு அலுவலகத்தில் ஏற்பட்ட வாயுக் கசிவால், 14 ஊழியர்கள், மூச்சுத்திணறல், மயக்கம் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் மூன்று பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழக மக்கள் நல்வாழ்வு துறையின் கீழ், அவசர கால உதவிக்கான, 108 ஆம்புலன்ஸ் சேவை செயல்பாட்டில் உள்ளது. இந்த சேவையை, ‘இ.எம்.ஆர்.ஐ., கிரீன் ஹெல்த் சர்வீஸ்’ நிறுவனம் செயல்படுத்தி வருகிறது.
மாநிலம் முழுதும், 1,353 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. அதில், 302 வாகனங்களில், செயற்கை சுவாச வசதி உள்ளது. இதுதவிர மலை பகுதிகளில், 40க்கும் மேற்பட்ட இருசக்கர ஆம்புலன்ஸ் வசதிகள், மலை பகுதிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மூச்சுத்திணறல்
இந்த ஆம்புலன்ஸ் சேவைக்கான கட்டுப்பாட்டு அறை மற்றும் தலைமை அலுவலகம், சென்னை தேனாம்பேட்டை, டி.எம்.எஸ்., வளாகத்தில் உள்ளது. அலுவலகத்தில், நேற்று மதியம், 2:40 மணியளவில் திடீரென வாயுக்கசிவு ஏற்பட்டது.
அங்கிருந்த ஊழியர் களுக்கு, மூச்சுத்திணறல், வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக, அங்கிருந்த, 100க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டனர்.
பின், வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, 108 ஆம்புலன்ஸ் உதவியுடன், இரு பெண் ஊழியர்கள் உட்பட, 14 பேர், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
முதற்கட்ட விசாரணையில், ‘ஏசி’யில் ஏற்பட்ட வாயு கசிவு காரணமாக, விபத்து நடந்திருப்பதாக தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து, மக்கள் நல்வாழ்வு துறை செயலர் சுப்ரியா சாஹு கூறியதாவது:
அவசர கால கட்டுப்பாட்டு அறையில் இருந்தவர்கள், சுவாசிக்க முடியாத அளவில் புகை வெளியேறியது. இருமல், சுவாச பிரச்னை ஏற்பட்டதும், 14 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில், 10 பேர் சாதாரண வார்டிற்கு மாற்றப்பட்டனர். ஒருவர் வீடு திரும்பினார். மூன்று பேருக்கு தீவிர சிகிச்சை தொடர்கிறது.
அவசர அழைப்புகள் அனைத்தும், புதுக்கோட்டையில் உள்ள அவசர கால கட்டுப்பாட்டு மையத்திற்கு மாற்றப்பட்டன.
இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சர் சந்திப்பு
வாயு கசிவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம், அமைச்சர் சுப்பிரமணியன், நலம் விசாரித்தார்.
பின், அவர் அளித்த பேட்டி:
‘108 ஆம்புலன்ஸ்’ சேவை அலுவலகத்தில், 100க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். அங்கு, ‘ஏசி’ பெட்டியில் இருந்து வாயு வெளியேறியுள்ளதாக தெரிகிறது. பாதிக்கப்பட்டவரில், ஒருவருக்கு தான் அதிக மூச்சுத்திணறல் இருந்தது.
அவரும் தீவிர சிகிச்சையில் இருந்து மீண்டுள்ளார். சிகிச்சையில் உள்ள 13 பேரும் இன்று வீடு திரும்புவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.