ஒரே நேர்க்கோட்டில் நான்கு கோள்கள்: பிர்லா கோளரங்கில் குழந்தைகள் உற்சாகம்
சென்னை, சென்னை பிர்லா கோளரங்கத்தில், ஒரே நேர்க்கோட்டில் வந்த நான்கு கோள்களை பொதுமக்கள் ஆர்வமாக கண்டு மகிழ்ந்தனர்.
கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் வரும் நிகழ்வு, ‘பிளானட்டரி பரேட்’ என சொல்லப்படுகிறது. இந்நிகழ்வை வெட்டவெளி அல்லது மொட்டை மாடியில் இருந்து காண முடியும். முன்பு, 2022 ஜூனில் ஐந்து கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் வந்தன.
சென்னை, கோட்டூர்புரம் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில், வெள்ளி, வியாழன், சனி, செவ்வாய், நெப்டியூன், யுரேனஸ் ஆகிய ஆறு கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் பார்க்க நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது. மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை, பொதுமக்கள் பார்க்க அனுமதிக்கப்பட்டனர்.
மூன்று டெலஸ்கோப்கள் கிழக்கு மற்றும் மேற்கு திசைகள் நோக்கி வைக்கப்பட்டிருந்தன. மேகம் பனிமூட்டமாக இருந்ததால், 6:30 மணிக்கு, வியாழன், வெள்ளி, சனி, செவ்வாய் ஆகிய நான்கு கோள்கள் மற்றும் சில துணைக்கோள்கள் தெரிந்தன. மேகமூட்டமாக இருந்ததால், சில கோள்கள் முழுமையாகத் தெரியவில்லை.
இதுகுறித்து, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மைய செயல் இயக்குநர் லெனின் தமிழ் கோவன் கூறியதாவது:
வானம் மேகமூட்டமாக இருந்ததால், துல்லியமாக தெரிவதில் இடர்பாடுகள் இருந்தன. நெப்டியூன், யுரேனஸ் ஆகிய கோள்களை மலைப்பிரதேசங்களில் உள்ள டெலஸ்கோப் வழியாக பார்க்க முடியும்.
இதை 1,100 பேர் பார்வையிட்டனர். அடுத்தடுத்த நாட்களில் தினமும், 1,500க்கும் மேற்பட்டோர் பார்வையிட வருவர் என, எதிர்பார்க்கிறோம்.
இந்த கோள்களின் அணிவகுப்பு, இம்மாதம் முழுதும் தெரியும். பிர்லா கோளரங்கில், 25ம் தேதி வரை காணலாம். பிப்., 28ல் ஏழு கோள்கள், ஆக., 11ல் ஆறு கோள்களின் அணிவகுப்பு நிகழும். அடுத்து, 2040 செப்., 8ம் தேதியில்தான், இதுபோன்ற நிகழ்வு ஏற்படும்.
இவர் அவர் கூறினார்