நெம்மேலியில் 200 மெல்லிய அலகு கடற்காக்கைகள் முகாம்
சென்னை, கிழக்கு கடற்கரை சாலை நெம்மேலி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில், 200க்கும் மேற்பட்ட அரிய வகை மெல்லிய அலகு கடற்காக்கைகள் முகாமிட்டுள்ள விபரம் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
பூமியின் வடகோளத்தில் குளிர் அதிகரிக்கும்போது, பல்வேறு வகை பறவைகள் தெற்கு நோக்கி வருவது வழக்கம். ஆண்டு தோறும் அக்., முதல் ஏப்., வரை வலசை பறவைகள் தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு வந்து செல்கின்றன.
இவ்வாறு வரும் பறவைகள், திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு துவங்கி, திருநெல்வேலி மாவட்டம் கூந்தன்குளம் வரை, பல்வேறு இடங்களில் முகாமிடுகின்றன. இந்த பறவைகளின் வருகை குறித்து, பல்வேறு தன்னார்வ அமைப்புகள், வனத்துறையுடன் இணைந்து கணக்கெடுப்பு நடத்துகின்றன.
இந்த வகையில், வலசை பறவைகள் வந்து செல்லும் இடங்கள் என்று அறிவிக்கப்படாத, கேளம்பாக்கம், நெம்மேலி, முட்டுக்காடு முகத்துவாரம் போன்ற இடங்களில், வெளிநாடு, வெளி மாநில பறவைகளின் வருகை அதிகரித்துள்ளது.
இதுகுறித்து, பறவைகள் கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ள, ‘தி நேச்சர் டிரஸ்ட்’ அமைப்பின் நிறுவனர் திருநாரணன் கூறியதாவது:
பறவைகள் சரணாலயம் என்று அறிவிக்கப்படாத கேளம்பாக்கம், நெம்மேலி, முட்டுக்காடு முகத்துவாரம் போன்ற இடங்களில், அரிய வகை பறவைகள் வந்து செல்கின்றன. தற்போதைய நிலவரப்படி, பூநாரை, வர்ணநாரை, கூழைக்கடா, காட்டுவாத்துகள், தட்டைவாயன், ஊசிவால் வாத்து, கொசு உள்ளான், பச்சை கால் உள்ளான், நீலசிறகி, நாமதலை வாத்து போன்ற பறவைகள் அதிகம் காணப்படுகின்றன.
இதில், தமிழகத்தில் ஒருசில இடங்களில் மட்டுமே காணப்படும் மெல்லிய அலகு கடற்காக்கை, 200க்கும் மேல் இங்கு முகாமிட்டுள்ளன. இந்த ஆண்டு நாகப்பட்டினம் மாவட்டம், கோடியக்கரையில், 30 பறவைகள் வந்துள்ளன. அதைவிட, இங்குதான் அதிக எண்ணிக்கையில் மெல்லிய அலகு கடற்காக்கைகள் வந்துள்ளன.
இப்பகுதியின் சூழலியல் சிறப்பு அம்சம்தான் இதற்கு காரணம். இப்பறவைகள் இங்கு முகாமிடுவதற்கான வேறு காரணங்கள் ஏதும் உள்ளதா என்று ஆராய்ந்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
எண்ணிக்கை விபரம்
கிழக்கு கடற்கரை சாலை நெம்மேலி, கேளம்பாக்கம், முட்டுக்காடு பகுதிகளில் காணப்படும் பறவைகளின் எண்ணிக்கை விபரம் பறவை / எண்ணிக்கை காட்டு வாத்துகள் / 10,000 நாமத்தலை வாத்து / 1,000 வர்ணநாரை / 300 கூழைக்கடா / 200 மெல்லிய அலகு கடற்காக்கை / 200 **