திருத்தணி மலை கோவிலுக்கு புதிய சாலை பணி துவக்கம்

சென்னை, திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோவில் மலைக்கு செல்வதற்கு, புதிய சாலை அமைக்கும் பணியில், நெடுஞ்சாலைத் துறை முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது

திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு பக்தர்கள் நடந்து செல்வதற்கு மூன்று படி பாதைகளும், வாகனங்கள் செல்வதற்கு தனியாக சாலையும் உள்ளது.

பண்டிகை காலங்கள், கிருத்திகை உள்ளிட்ட விசேஷ நாட்களில், கோவிலுக்கு அதிகளவில் பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஏராளமான திருமணங்களும் நடந்து வருகின்றன.

இதில் பங்கேற்பதற்காக ஆயிரக்கணக்கானோர், மலைக்கு வாகனங்களிலும், நடந்தும் செல்கின்றனர். கோவிலுக்கு செல்வதற்கு சாலை குறுகலாக இருப்பதால், விசேஷ நாட்களில் மலைக்கு செல்லும் வாகனங்கள், கீழே இறங்க காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், பலரும் குறித்த நேரத்திற்கு தரிசனம், திருமணம் செய்து விட்டு திரும்ப முடியாத நிலையும் நீடித்து வருகிறது. எனவே, கோவிலுக்கு செல்வதற்கு மாற்று பாதை அமைப்பதற்கு, ஹிந்து அறநிலையத் துறை முடிவெடுத்துள்ளது.

இதற்கான பணிகள் நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. இதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயும் பணிகளை, மாநில நெடுஞ்சாலை துறை துவங்கி உள்ளது.

கோவிலுக்கு, ‘ரோப் கார்’ வசதி ஏற்படுத்த திட்டமிடப்பட்டு இருந்தது. மலையில் போதிய இடம் இல்லாததால், அத்திட்டம் பரிசீலனையில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *