உடைந்த பூங்கா தடுப்பு சுவர் ஓராண்டுக்கு பின் சீரமைப்பு
கீழ்ப்பாக்கம், கீழ்ப்பாக்கம் பகுதியில், சேதமடைந்து விழுந்த சாலையோர பூங்காவின் தடுப்பு சுவரை, மாநகராட்சி சீரமைத்து வருகிறது.
அண்ணா நகர் மண்டலம், 100வது வார்டில், கீழ்ப்பாக்கம், ஹால்ஸ் சாலை உள்ளது. இங்குள்ள ஹால்ஸ் சாலை மற்றும் டெய்லர்ஸ் சாலை இணைப்பு பகுதியில், மாநகராட்சி பாராமரிப்பில், சாலையோர பூங்கா செயல்படுகிறது.
சென்னை மாநகராட்சியின் பராமரிப்பில் உள்ள இப்பூங்காவில், கடந்த ஆண்டு ஜனவரியில் தடுப்பு சுவர் சேதமடைந்து, விழுந்து கிடந்தது.
பூங்காவை சீரமைக்காமலும், கீழே விழுந்து கிடந்த தடுப்பு சுவர் கற்களை அகற்றாமல் மாநகராட்சி ஓராண்டுக்கு மேல் அலட்சியமாக இருந்தது. பூங்காவில் வெளிப்புறத்தில் உள்ள ‘கியூ.ஆர்.,’ கோடு வாயிலாக பலமுறை புகார் அளித்தும் பயனில்லை. இதுகுறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானது.
ஓராண்டுக்குப் பின், தற்போது பூங்கா தடுப்பு சுவரை சீரமைக்கும் பணியை மாநகராட்சி துவங்கி உள்ளது. பணியை விரைவாக முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.