சோழிங்கநல்லூர் தொகுதியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் 161 குடும்பங்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கினார்
துரைப்பாக்கம், ஜன.22: சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட 161 குடும்பங்களுக்கு, வீட்டுமனை பட்டாக்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி மக்களுக்கு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில், வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நேற்று சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
சோழிங்கநல்லூர் எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு, ஒக்கியம் துரைப்பாக்கம், கொட்டிவாக்கம், ஜல்லடியன்பேட்டை ஆகிய பகுதியில் வசிக்கும் 161 பேருக்கு, வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார். நிகழ்ச்சியில், தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி, மண்டல குழு தலைவர்கள் எஸ்.வி.ரவிச்சந்திரன், வி.இ.மதியழகன், 195வார்டு கவுன்சிலர் ஏகாம்பரம், வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.