கீரை பறிக்க சென்ற பெண் குட்டையில் மூழ்கி பலி
எண்ணுார்:எர்ணாவூர், சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் முருகன், 45; மீனவர். இவரது மனைவி காயத்ரி, 40. தம்பதிக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.
இவரது வீட்டருகே, எர்ணாவூர் – ரயில்வே குட்டையில் அதிகளவில் பொன்னாங்கண்ணி கீரை வளர்ந்திருந்தது. அதை பறிப்பதற்காக, காயத்ரி அங்கு சென்றுள்ளார்.
வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அக்கம் பக்கத்தில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில், நேற்று காலை, எர்ணாவூர் ரயில்வே குட்டையில் காயத்ரியின் உடல் மிதந்தது.
எண்ணுார் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குட்டையில் கீரை பறிக்க சென்ற காயத்ரி, திடீரென வலிப்பு ஏற்பட்டு தவறி தண்ணீரில் விழுந்து உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே, இறப்பிற்கான விபரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.