குப்பையில் நிழற்குடை அயப்பாக்கத்தில் அவலம்
அயப்பாக்கம்:அயப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட திருவேற்காடு பிரதான சாலையில், எம்.ஜி.ஆர்.புரம் பேருந்து நிறுத்தம் உள்ளது.
கடந்த 2022ல், அம்பத்துார் ஏரியை ஒட்டிய சாலையில், மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடந்தது. அதற்காக, பல லட்சம் மதிப்பில், ஸ்டீல் உலோகத்தால் கட்டப்பட்ட நிழற்குடை அப்புறப்படுத்தப்பட்டது.
இது குறித்து, சமூக ஆர்வலர்கள் திருமுல்லைவாயில் போலீசில் புகார் அளித்த போது, நிழற்குடையை மீண்டும் அவ்விடத்தில் வைத்து தருவதாக, ஒப்பந்ததாரர் உறுதி அளித்திருந்தார்.
இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்று வரை அந்த நிழற்குடை சீரமைக்கப்படாமல், குப்பை போல் யாருக்கும் பயனின்றி பாழாகி வருகிறது.
இதனால், பேருந்துக்காக காத்திருக்கும் அப்பகுதிவாசிகள், மழை, வெயிலில் அவதிப்படுகின்றனர்.
அதேபோல், அம்பத்துார் ஏரி நடைபாதையில் நிழற்குடை கிடப்பதால், அதிகாலை நடைபயிற்சி மேற்கொள்வோரும் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, மக்கள் வரிப்பணத்தில் அமைக்கப்பட்ட நிழற்குடையை சீரமைத்து, மீண்டும் அதே இடத்தில் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.