விம்கோ நகர் சுரங்கப்பாதை விரைந்து முடிக்க கோரிக்கை
திருவொற்றியூரை அடுத்த விம்கோ நகர் ரயில் நிலையம் அருகே, தண்டவாளத்தை கடக்கும் பொதுமக்கள், ரயில்களில் அடிப்பட்டு உயிரிழப்பது தொடர்கதையாக இருந்தது.
இதற்கு தீர்வாக, கடந்தாண்டு மார்ச், 7 ல், 25.09 கோடி ரூபாய் செலவில், சுரங்கப்பாதை அமைக்கும் பணி துவங்கி நடந்து வருகிறது.
இதில், ரயில்வே தண்டவாளம் கீழ், 155 அடி துாரத்திற்கான பணிகள் முடிந்துள்ளன. திருவொற்றியூர் நெடுஞ்சாலை பக்கம், 475 அடி துாரமும், ஜோதி நகர் பக்கம், 495 அடி துாரமும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
இதற்கிடையில், சுரங்கப்பாதை பணிகள் காரணமாக, விம்கோ நகர் ரயில் நிலையம் அருகே இருந்த, ரயில்வே கேட் மூடப்பட்டு, தண்டவாளக் கற்கள் கொண்டு, அவ்வழி அடைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஒருவருக்கு மேல் யாரும் அவ்வழியே செல்ல முடியவில்லை.
பள்ளிச் செல்லும் மாணவர்கள் சைக்கிளை கூட குறுகிய வழியில் கொண்டு செல்ல முடிவதில்லை.
குறிப்பாக, ராமநாதபுரம், ஜோதி நகர் போன்ற பகுதிகளில் யாரேனும் உயிரிழந்தால், அவர்களின் இறுதி ஊர்வலம் செல்வதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, மந்த கதியில் நடந்து வரும், விம்கோ நகர் ரயில்வே சுரங்கப்பாதை பணிகளை முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.