சென்னைக்கு திரும்புவோரால் நெரிசலை தவிர்க்க போக்குவரத்து மாற்றம்
தாம்பரம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூர் சென்று, சென்னைக்கு திரும்புவோரால், நெரிசல் ஏற்படுவதை தடுக்கவும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் சிரமமின்றி பேருந்துகளை இயக்கவும், புறநகரில் இரண்டு நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து போக்குவரத்து போலீசார் கூறியதாவது:
l தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வரும் கனரக வாகனங்கள், பரனுார் சந்திப்பில் திரும்பி, செங்கல்பட்டு- காஞ்சிபுரம் சாலை வழியாக, வாலாஜாபாத், ஒரகடம், ஸ்ரீபெரும்புதுார் வழியாக செல்ல வேண்டும்
l சென்னை நோக்கி வரும் வாகனங்கள், சிங்கபெருமாள் கோவில்- ஒரகடம் சாலையில் திரும்பி, ஒரகடம், ஸ்ரீ பெரும்புதுார் வழியாக செல்ல வேண்டும்
l திருப்போரூர் வழியாக வரும் கனரக வாகனங்கள், டாக்டர் அம்பேத்கர் சிலை வழியாக திரும்பி, செங்கல்பட்டு வழியாக பயணிக்க வேண்டும்
l ஜி.எஸ்.டி., வண்டலுார்-, கேளம்பாக்கம், ஓ.எம்.ஆர்., மற்றும் ஈ.சி.ஆர்., சாலைகளில் கனரக வாகனங்களுக்கு ஜன., 18 மதியம் 2:00 மணி முதல் ஜன., 20 மதியம் 2:00 மணி வரை அனுமதி இல்லை
l பல்லாவரம் பாலத்தில், ஜன., 18 மதியம் 2:00 மணி முதல் ஜன., 20 மதியம் 12:00 மணி வரை, சென்னை நோக்கி ஒருவழி போக்குவரத்து நடைமுறை படுத்தப்படும்
l ஜி.எஸ்.டி., சாலையில் போக்குவரத்தை விரைவு படுத்த, ஆம்னி பேருந்துகள் வெளிவட்ட சாலை வழியாக பூந்தமல்லி மற்றும் மதுரவாயல் நோக்கி திருப்பி விடப்படும். முடிச்சூர் சாலை சந்திப்பில், தேவையான போது மற்ற வாகனங்களையும் வெளிவட்ட சாலை- தாம்பரம் நோக்கி திருப்ப வாய்ப்புள்ளது. இதன் மூலம் ஜீரோ பாயின்ட் பகுதியில் போக்குவரத்து எளிதாக்கப்படும்
l பொதுமக்களின் வசதிக்காக செங்கல்பட்டு, மறைமலை நகர், பொத்தேரி, காட்டாங்கொளத்துார் ரயில் நிலையங்களில் இருந்து, 15 நிமிட இடை வெளியில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
பஸ், ரயில்
நிலையங்களில்கூட்டம் பொங்கல் பண்டிகை முடிந்து ஏராளமானோர் சென்னைக்கு திரும்பி வருவதால், ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் பயணியர் கூட்டம் அதிகமாக இருந்தது.பொங்கல் தொடர் விடுமுறைக்கு சென்னையில் இருந்து 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். விடுமுறை முடிந்து சென்னை திரும்புவோர் வசதிக்காக, அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் இரண்டு நாட்களாக, சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஏற்கனவே அறிவித்த படி நாகர்கோவில், திருநெல்வேலி, கோவையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.இதனால், சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்களிலும், கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் பேருந்து நிலையங்களில் நேற்று அதிகாலை முதல் பயணியர் கூட்டம் அதிகமாக இருந்தது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு திரும்பியதால், செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், வண்டலுார், பெருங்களத்துார், தாம்பரம் பகுதியில் நேற்று காலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் நீண்ட துாரத்திற்கு அணிவகுத்து மெதுவாக சென்றன.
2,100 சிறப்பு பஸ்கள்
போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: இந்த பொங்கலுக்கு சென்னையில் இருந்து அரசு பேருந்துகளில் மட்டும் 8.73 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். சென்னை திரும்புவோருக்கு வசதியாக தினமும் இயக்கப்படும் 2,092 பேருந்துகளோடு, கூடுதலாக 2,100 சிறப்பு பேருந்துகள் இன்று இயக்கப்படுகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.
காட்டாங்கொளத்துார் – தாம்பரத்திற்கு
நாளை சிறப்பு மின் ரயில்கள் இயக்கம்பொங்கல் பண்டிகையை முடித்து, சென்னைக்கு திரும்பும் பயணியருக்காக, காட்டாங்கொளத்துார் – தாம்பரம் இடையே, நாளை மின்சார சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.சென்னை ரயில் கோட்டம், நேற்று வெளியிட்ட அறிக்கை:பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்பும் பயணியர் எளிதாக வரும் வகையில், காட்டாங்கொளத்துார் – தாம்பரம் இடையே, மின்சார சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.காட்டாங்கொளத்துார் — தாம்பரத்துக்கு, நாளை அதிகாலை 4:00, 4:30, 5:00, 5:45, 6:20 ஆகிய நேரங்களில், மின்சார சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.இதேபோல், தாம்பரம் – – காட்டாங்கொளத்துாருக்கு, அதிகாலை 5:05, 5:40 மணிக்கு இரண்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.