‘பலே’ திருடர்கள் கைது 16 பைக் பறிமுதல்
செம்மஞ்சேரி, செம்மஞ்சேரி, கண்ணகிநகர், கானத்துார் காவல் நிலைய எல்லையான, இ.சி.ஆர்., — ஓ.எம்.ஆரில், ஆறு மாதமாக 50க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் திருடப்பட்டதாக புகார்கள் பதிவாகி உள்ளன. போலீசாரின் விசாரணையில், ஒரு வாகனம், சேலையூரில் இருப்பதும்; திருவண்ணாமலையை சேர்ந்த வெங்கடேசன், 22, என்பவர் வைத்திருந்ததும் தெரிந்தது. இவரும், அருண்குமார், 21, என்ற நபரும், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை குறிவைத்து திருடி வந்துள்ளனர்.
திருடிய வாகனங்களை, திருவண்ணாமலை கொண்டு செல்வர். ஒரு வாகனத்தை ஒரே நபர் கொண்டு செல்லாமல், இடைப்பட்ட ஊர்களில் நிற்கும் நபர்கள், மாறி மாறி வாகனத்தை ஓட்டிச் செல்வர். இதற்கு, தீபக், 19, விஜய், 20, சதீஷ்குமார், 19, ஆகியோரை பயன்படுத்தியுள்ளனர். நேற்று, ஐந்து பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து, 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 16 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.