‘பெருங்குடியில் குப்பை எரி உலை கைவிடா விட்டால் போராட்டம்’

சென்னை:’பெருங்குடி குப்பை எரி உலை திட்டத்தைக் கைவிட வேண்டும். இல்லையென்றால், மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்’ என, பா.ம.க., தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:

சென்னை பெருங்குடியில் உள்ள குப்பைக் கிடங்கில், குப்பையை எரித்து மின்சாரம் தயாரிக்கும் எரி உலை அமைப்பதற்கான ஆயத்தப் பணிகளை, மாநகராட்சி துவங்கியுள்ளது. இந்த திட்டத்தால், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் சூழலியல் மிகக் கடுமையாக பாதிக்கப்படும்.

வெளிநாடுகளின் மக்கள், குப்பை எரி உலைகளை கடுமையாக எதிர்க்கின்றனர். அமெரிக்காவில், 1991ம் ஆண்டில், 187 எரி உலைகள் இருந்தன. தற்போது வெறும், 77 எரி உலைகள் மட்டுமே உள்ளன. கடந்த ஜூனில் அமெரிக்காவின், 250 நகரங்களின் மேயர்கள் ஒன்று கூடி, தங்கள் நகரங்களில் எரி உலை திட்டங்களை அனுமதிக்க மாட்டோம் என, தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.

இந்தியாவில் உருவாகும் குப்பை, எரி உலைகளுக்கு ஏற்றதாக இல்லாததால், லக்னோ, புனே, கான்பூர் உள்ளிட்ட பல இடங்களில் துவக்கப்பட்ட எரி உலைகள் தோல்வி அடைந்து, மூடப்பட்டுவிட்டன. சென்னை மாநகரிலும் குப்பையை எரித்து, அதிலிருந்து மின்சாரம் எடுப்பது, தொழில்நுட்ப ரீதியில் சாத்தியமற்றது.

இதை உணர்ந்து, பெருங்குடியில் குப்பை எரி உலை அமைக்கும் திட்டத்தை, சென்னை மாநகராட்சி கைவிட வேண்டும். இல்லாவிட்டால், மக்களைத் திரட்டி மிகப்பெரிய அளவிலான போராட்டத்தை பா.ம.க., நடத்தும்.

இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *