சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு பயணம்; திக்கு முக்காடின தேசிய நெடுஞ்சாலைகள்
சென்னை:பொங்கல் பண்டிகைக்காக, சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்றோரின் வாகனங்களால், தேசிய நெடுஞ்சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தோர் மட்டுமின்றி, வெளி மாநிலங்களைச் சேர்ந்தோரும் வேலை, தொழில் காரணமாக தனியாகவும், குடும்பத்துடனும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் வசித்து வருகின்றனர். கல்லுாரி மாணவர்களும் அதிகம் தங்கியுள்ளனர்.
இன்று ஒருநாள் விடுப்பு எடுத்தால், பொங்கல் பண்டிகைக்கு 19ம் தேதி வரை தொடர் விடுமுறை கிடைக்கும். இதற்காக, சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் தங்கியுள்ள பலரும், மூன்று நாட்களாக, சொந்த ஊர்களுக்கு செல்ல துவங்கி உள்ளனர்.
இதற்காக கிளாம்பாக்கம், மாதவரம் ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு அரசு மற்றும் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. வழக்கமான ரயில்களுடன் சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன.
பயணியர் செல்வதற்காக மாநகர பேருந்துகள், வாடகை கார்கள், ஆட்டோக்கள் ஆகியவை, பேருந்து, ரயில், விமான நிலையங்களுக்கு இயக்கப்படுகின்றன.
மேலும் பலர், தங்கள் சொந்த கார்கள், மினி லாரிகள், சரக்கு லாரிகள் ஆகியவற்றின் வாயிலாகவும், சொந்த ஊர்களுக்கு சென்று வருகின்றனர்.
இதனால், சென்னை – கோல்கட்டா, சென்னை – பெங்களூரு, சென்னை – திண்டுக்கல், சென்னை பைபாஸ், சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலைகளில், கடும் வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இங்குள்ள வானகரம், சூரப்பட்டு, பட்டரை பெரும்புதுார், பரனுார் சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்துவதற்கு நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்று செல்கின்றன.
சென்னையில் வடக்கு உள்வட்ட சாலையில் உள்ள மாத்துார் சுங்கச்சாவடியை கடந்து செல்வதற்கு பயணியர் வாகனங்கள் மட்டுமின்றி, கன்டெய்னர் உள்ளிட்ட சரக்குவாகனங்களும் நீண்ட நேரமாக காத்திருக்கும் நிலை உள்ளது. மூன்று நாட்களில், 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர், சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.