நெல்லை நாடார் பள்ளி ‘ சாம்பியன்’ ‘டி – 20’ பைனலில் ஒமேகா அணியை வீழ்த்தியது
சென்னை, எம்.சி.சி., பள்ளி மற்றும் எம்.ஆர்.எப்., நிறுவனம் இணைந்து, பள்ளிகளுக்கு இடையிலான ‘டி – 20’ கிரிக்கெட் போட்டியை நடத்தின.
சேத்துப்பட்டு எம்.சி.சி., பள்ளியில் நடந்த இப்போட்டியில், சென்னை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றன.
அனைத்து ‘நாக் – அவுட்’ போட்டிகள் முடிவில், நெல்லை நாடார் மற்றும் ஒமேகா பள்ளி அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.
நேற்று முன்தினம் மாலை நடந்த இறுதிப் போட்டியில், ‘டாஸ்’ வென்ற ஒமேகா பள்ளி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதில், முதலில் பேட் செய்த நெல்லை நாடார் பள்ளி அணி, 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் அடித்தது. அணியின் வீரர் ஜிஷ்ணு, 49 பந்துகளில் 3 சிக்சர், 6 பவுண்டரியுடன் 67 ரன்கள் குவித்தார்.
அடுத்து களமிறங்கிய ஒமேகா பள்ளி அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு, 133 ரன்கள் மட்டுமே எடுத்து அதிர்ச்சி தோல்வியடைந்தது. இதனால், நெல்லை நாடார் பள்ளி அணி, 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.