‘ தமிழிசை மூவர் ‘ நாட்டிய நாடகம் புத்தாண்டின் புதிய அனுபவம்
தமிழிசை மூவர் என அழைக்கப்படும் தில்லை முத்துத் தாண்டவர், அருணாச்சல கவிராயர், மாரிமுத்தா பிள்ளை ஆகியோர், தமிழகத்தில் கர்நாடக இசை வளர பெரும் தொண்டாற்றியவர்கள்.
இம்மூவரும் இயற்றிய தமிழ்க் கிருதிகள், கர்நாடக இசையின் பரிணாம வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பை வழங்கின.
அவர்களின் இசைத் தொண்டை நினைவுகூர்ந்து போற்றும் விதமாக, சைவ சுதா பரதக்கலை சார்பில், சைலஜா குழுவினரின், ‘தமிழிசை மூவர்’ என்ற நாட்டிய நாடகம், தி.நகர், வாணி மஹாலில் அரங்கேற்றம் செய்யப்பட்டது.
நாகை ஸ்ரீராமின் மிருதங்கம் செவிகளைக் குளிர்விக்க, அனந்தராமனின் வயலின் அற்புதமாய் ஒத்திசைக்க, நந்தினியின் வாய்ப்பாட்டு அரங்கை நிசப்தமாக்க, விநாயகர் அகவலோடு துவங்கியது அருணாச்சல கவிராயரின் ராமாயண காவியம்.
‘எனக்கு உன் இருபதம் நினைக்க வரம் தருவாய்’ என்ற பாடலோடு, ஒட்டுமொத்த ராமாயணக் காவியத்தின் நிகழ்வுகளை, நாட்டிய வடிவில் தத்ரூபமாக நடித்துக் காட்டி, உடல் மொழி பாவனையால், ரசிகர்களை பரவசமடையச் செய்தனர்.
‘ஜனக வேல் உடைத்து ஜானகி கை பிடித்து’ என்ற பாடலின் அழுத்தம் உணர்ந்து, சீதா பிராட்டியாரை ஸ்ரீராமன் அழைத்துச் செல்லும் காட்சி அமர்க்களம்.
ஸ்ரீராமனாக பிரபா, லட்சுமணனாக லட்சுமி, சீதாபிராட்டியாக ஆரத்தி ஆகியோரின் நடனமும், பாவனைகளும் காந்தமாய் ரசிகர்களைக் கவர்ந்திழுக்க, ராவணன், சூர்ப்பனகை உள்ளிட்ட வேடங்கள் தரித்து, அரங்கை அதிரச் செய்த சைலஜா, நடிப்பில் ஒரு படி முந்தி நின்றார்.
இறுதி நொடி வரை ரசிக்க வைத்த, ‘தமிழிசை மூவர்’ நாட்டிய நாடகம், இந்தப் புத்தாண்டின் புதிய அனுபவம்.