தேர்தலுக்கு முன் சாலையை சீரமைக்க மண்டல கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

கோடம்பாக்கம், கோடம்பாக்கம் மண்டல குழு கூட்டம், மண்டல குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில், கோடம்பாக்கத்தில் நேற்று நடந்தது.

கூட்டத்தில், கவுன்சிலர்கள் பங்கேற்று, நிறைவேற்றப்பட்ட, 20 தீர்மானங்கள் குறித்தும் வார்டின் அடிப்படை தேவைகள் குறித்தும் பேசினர்.

கண்ணன், தி.மு.க., 138 வது வார்டு: மழைக்காலங்களில் பாரதிதாசன் காலனியில் மழைநீர் தேங்குகிறது. இதற்கு தீர்வாக பழைய மழைநீர் வடிகாலை இடித்து, 6.50 கோடி ரூபாய் செலவில் மழைநீர் வடிகால் அமைக்க ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.

புது மழைநீர் வடிகால், பழைய மழைநீர் வடிகாலை விட அதிக கொள்ளளவு கொண்டதாக அமைக்க வேண்டும். சாலைகள் குண்டும் குழியுமாக மாறி உள்ளன.

ராஜா அன்பழகன், தி.மு.க., 141வது வார்டு : மார்ச் முதல் மே மாதத்திற்குள் புது சாலைகள் அமைப்பதுடன், சாலையில் உள்ள ஒட்டுப்பணிகளை மேற்கொண்டால் தான், சட்டசபை தேர்தல் நேரத்தில் மக்களை சந்திக்க முடியும். அதேபோல், வார்டுகளில் வெண்டிங்’ பகுதி சாலைகளை முறையாக தேர்வு செய்து, கடைகளை அமைக்க வேண்டும்.

ரவிசங்கர், தி.மு.க., 129 வது வார்டு : மூன்று வார்டுகளுக்கு சேர்த்து, 129 வது வார்டில் மாட்டு கொட்டகை அமைக்கப்பட உள்ளது. பசு மாடுகளின் உரிமையாளர்கள் அதே இடத்தில் தங்கள் மாடுகளை கட்டி, பராமரிக்கலாம்.

குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சீர் செய்ய வேண்டும்.

ஏழுமலை, தி.மு.க., 133 வது வார்டு : வார்டில் உள்ள அனைத்து துறை அதிகாரிகளிடம் இயந்திரம் அளித்து அபராதம் விதிக்க வற்புறுத்துகின்றனர். அபராதம் விதிப்பதால், கவுன்சிலர்கள் மற்றும் முதல்வரை, மக்கள் மற்றும் வியாபாரிகள் திட்டுகின்றனர். அரசிற்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது.

சுப்பிரமணியன், ம.தி.மு.க., 139 வது வார்டு: ஜாபர்கான்பேட்டை விளையாட்டு திடலில் பொங்கல் திருவிழா நடக்க உள்ளது. அங்கு மக்கள் அதிகம் கூட வாய்ப்புள்ளதால், குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வேண்டும்.

தனசேகரன், தி.மு.க., 137 வது வார்டு : நில புரோக்கர்கள் சங்கம் என்ற பெயரில், பல இடங்களில் கொடிகள் மற்றும் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற சட்டவிரோதமான ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

பாஸ்கர், தி.மு.க., 130 வது வார்டு : வடபழனியில் பல்வேறு சாலைகள் மழையால் பாதிக்கப்பட்டு, குண்டும் குழியுமாக மாறி உள்ளன. அப்பகுதியில் புதிய தார் சாலை அமைப்பதுடன், சாலை ஒட்டுப்பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

ஸ்டெல்லா ஜாஸ்மின் ரத்னா, தி.மு.க., 128வது வார்டு : விருகம்பாக்கம் சாரதா நகரில் உள்ள பொது பயன்பாட்டு இடத்தை ஆக்கிரமித்து கோவில் கட்டப்பட்டுள்ளது. ஏரிக்கரை

தெருவில், சாலையை ஆக்கிரமித்து படிக்கட்டுகள் கட்டப்பட்டுள்ளன.

கவுன்சிலர்கள் கூறும் போதே நடவடிக்கை எடுத்திருந்தால், இவற்றை தடுத்திருக்கலாம். ஆன்லைன் புகார் அளிக்கும் நபருக்கு அளிக்கும் முக்கியத்துவம் கூட கவுன்சிலர்களுக்கு இல்லை.

இவ்வாறு கவுன்சிலர்கள் பேசினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *