படகு கவிழ்ந்து ஒருவர் பலி
பழவேற்காடு,பழவேற்காடு, கூனங்குப்பம் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி, 45.
இவரது பைபர் படகில், அதே கிராமத்தைச் சேர்ந்த மணிபாலன், 35, செல்வம், 35, மோகன், 55, மற்றும் அரங்கம்குப்பத்தைச் சேர்ந்த சதிஷ்குமார், 25. ஆகியோர், கடந்த 7ம் தேதி கடலில் மீன்பிடிக்க சென்றனர்
இரண்டு நாட்கள் மீன்பிடித்தபின், நேற்று மதியம் கரை திரும்பிக் கொண்டிருந்தனர். பழவேற்காடு முகத்துவாரம் அருகே வரும்போது, ராட்சத அலையில் சிக்கி, படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
படகில் இருந்து ஐந்து மீனவர்களும் கடலில் விழுந்தனர். இதில், தட்சணாமூர்த்தி, மணிபாலன், சதிஷ்குமார் ஆகியோர் நீச்சல் அடித்து கரை சேர்ந்தனர். செல்வம், மோகன் ஆகியோர் கடலில் மூழ்கி மாயமாயினர். தகவல் அறிந்த மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் அங்கு விரைந்தனர்.
கடலில் மாயமானவர்களை தேடி வந்த நிலையில், நேற்று மாலை மோகனின் உடல் கரை ஒதுங்கியது. செல்வத்தை தேடும் பணிகள் தொடர்ந்து நடக்கின்றன.