பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் தாமதமாக வந்தவர்களை உள்ளே அனுமதிக்காததால் மாநகர பேருந்துகள் மீது ஏறி ரகளை: கோஷம் எழுப்பி பேரணியாக சென்றதால் பரபரப்பு

சென்னை: பச்சையப்பன் கல்லூரி கேட் 10 மணிக்கு மேல் மூடப்பட்டதால் ஆத்திரமடைந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கோஷம் எழுப்பியபடி மாநகர பேருந்துகளை வழிமறித்து ரகளையில் ஈடுபட்டனர். கீழ்ப்பாக்கத்தில் உள்ள பச்சையப்பன் கல்லூரியில் நேற்று பொங்கல் விழா நடந்தது. இதனால் கல்லூரியில் மாணவர்கள் வேட்டி அணிந்து கொண்டு பொங்கல் விழா கொண்டாடினர். விழா 9 மணிக்கு தொடங்கியது. பல மாணவர்கள் தாமதமாக கல்லூரிக்கு வந்தனர். இதனால் கல்லூரி நிர்வாகம் சார்பில் காலை 10 மணிக்கு கல்லூரி நுழைவாயிலை மூடி பூட்டுபோட்டனர்.

அப்போது தாமதமாக வந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் நுழைவாயில் முன்பு நின்று, கேட்டை திறக்க கல்லூரி நிர்வாகத்திடம் கோரினர். ஆனால் கல்லூரி நிர்வாகம் கதவு திறக்கப்படாது என்று கூறிவிட்டது. இதனால் ஆத்திரமடைந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்லூரி முன்பு உள்ள பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தங்களது கல்லூரி ‘ஐடி’ கார்டுகளை சுழற்றியபடி ‘பச்சையப்பனுக்கு ஜே’ என்று கோஷம் எழுப்பியபடி சாலையில் நடந்தனர். அப்போது அவ்வழியாக வந்த மாநகர பேருந்துகளை வழிமறித்து, அதன் மீது ஏறி கோஷம் எழுப்பி பயணிகளுக்கு தொந்தரவு செய்தனர்.

தகவலறிந்த கீழ்ப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போலீசார் வருவதை பார்த்த மாணவர்கள் நாலா புறமும் சிதறி ஓடினர். இதனால் சிறிது நேரம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பரபரப்பும் ஒரு மணி நேரத்திற்கு மேல் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இருந்தாலும் போலீசார் சிசிடிவி பதிவுகளை வைத்து சாலையில் பேருந்தை வழிமறித்து பொதுமக்களுக்கு தொந்தரவு கொடுத்த மாணவர்கள் யார், யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவர்கள் ரகளையில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *