சென்னையில் இன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு: திமுக மாணவர் அணியினர் பங்கேற்க அழைப்பு
சென்னை: திமுக மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ. வெளியிட்ட அறிவிப்பு: பல்கலைக்கழகங்களின் தனித்தன்மையை, தன்னாட்சியை ஒழித்து, அனைத்தையும் பல்கலைக்கழக மானியக் குழுவின் பெயரால், ஆளுநரின் பெயரால் ஒன்றிய அரசே அபகரிக்கும் திட்டமே, பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை நியமிக்கும் வரைவு நடைமுறை ஆகும்.
கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வரவும், சமூகநீதியைப் பாதுகாக்கவும், பல்கலைக்கழக மானியக் குழுவின் வரைவு விதிமுறைகள் 2025-ஐ கண்டித்தும், இன்று (10ம் தேதி) சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு நடத்த உள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக மாணவர் அணியினர், கல்லூரி மாணவர் அமைப்புகளின் நிர்வாகிகள், தோழர்களும் பெருந்திரளாக கலந்து கொண்டு, குமரி ஒலிக்கும் நமது கண்டனக் குரல் செங்கோட்டையில் அமர்ந்திருக்கும் ஒன்றிய பா.ஜ. அரசின் செவிப்பறையை கிழிக்கச் செய்திட அடலேறுகளே அணிதிரள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.