வேளச்சேரி ஏரியில் கழிவுநீர் கலப்பு நிலத்தடி நீர் மாசடைவதாக குற்றச்சாட்டு
வேளச்சேரி:சென்னையின் முக்கிய ஏரியாக, வேளச்சேரி ஏரி உள்ளது. சர்வே எண்: 123/1ல், மொத்தம் 265 ஏக்கர் பரப்பில் இருந்த ஏரி, அரசு திட்டங்கள், சாலை விரிவாக்கம் போக, தற்போது, 55 ஏக்கர் பரப்பில் உள்ளது
சி.எம்.டி.ஏ., சார்பில், 19.40 கோடி ரூபாயில், ஏரியில் படகு சவாரியுடன், 1.91 ஏக்கர் பரப்பில் பூங்கா அமைக்கப்பட உள்ளது.
ஏரி நீர்ப்பிடிப்பு மற்றும் கரையில், 800க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதை அகற்ற, பயோமெட்ரிக் கணக்கெடுப்பு பணி நடக்கிறது
பருவமழையின் போது, பழைய நீர் வெளியேறி, நேரடியாக விழும் மழைநீரும், வடிகால் வழியாக வரும் நீரும் சேர்ந்து, நன்னீராக காணப்படும்.
சமீபத்திய பருவமழைக்கு பின், கழிவுநீர் கலப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக, ஆதம்பாக்கம் ராமகிருஷ்ணபுரம், பாலகிருஷ்ணபுரம், கக்கன் நகர், அம்பேத்கர் நகர், நேரு நகரில் வடியும் கழிவுநீர், ஏரியில் அதிகளவு கலக்கிறது.
இதனால், ஏரி பரப்பில், 40 சதவீதம் கழிவுநீராகவும், 60 சதவீதம் நன்னீராகவும் உள்ளது. கழிவுநீர் கலக்கும் பகுதியை ஒட்டி, அதிக குடியிருப்புகள் உள்ளன.
அங்குள்ள ஆழ்துளை கிணறுகளில், தண்ணீர் கலங்கலுடன், துர்நாற்றம் வீசுகிறது. ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கூறினர்.