எல்.ஐ.சி., சிக்னல் அருகே போக்குவரத்து மாற்றம்
சென்னை:சென்னையில் நெரிசல் ஏற்படும் இடங்களை கண்காணித்து, அவற்றிற்கு தீர்வு காணும் விதமாக சில இடங்களில், ‘யு – டர்ன்’ வசதியை, போக்குவரத்து போலீசார் அமல்படுத்தி உள்ளனர்.
பெரியமேடு, மத்திய கைலாஷ் உள்ளிட்ட இடங்களில், சிக்னல் இன்றி யு – டர்ன் வசதியை அமல்படுத்தியது, வாகன ஓட்டிகளிடையே வரவேற்பை பெற்றது.
அதேபோல் அண்ணா சாலை – ஜி.பி., சாலை சந்திப்பில் ஏற்படும் நெரிசலை குறைக்கும் விதமாக, எல்.ஐ.சி., அருகே யு – டர்ன் வசதியை, போக்குவரத்து போலீசார் அமல்படுத்த உள்ளனர்.
ஜி.பி., சாலை வழியாக, அண்ணா சாலை நோக்கி வரும் வாகனங்கள், இடதுபுறம் திரும்பி, எல்.ஐ.சி., அருகே கொடுக்கப்பட்டுள்ள யு – டர்னில் திரும்பி செல்லலாம். இதற்காக, எல்.ஐ.சி., எதிரே சாலை மைய தடுப்புகள் அகற்றப்பட்டுள்ளன.