லஞ்சம் வாங்கிய ‘இன்ஸ்’சுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை
செங்கல்பட்டு, சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த ஜோசப் பென்ஸிகர் என்பவர், காஸ் கம்பெனி நடத்தி வருகிறார்.
இவரிடம், ஆதம்பாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சவுந்தர்ராஜன், 55, என்பவர், ‘மாதந்தோறும் 5,000 ரூபாய் லஞ்சம் தர வேண்டும்’ என, கடந்த 2011ம் ஆண்டு கேட்டுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத ஜோசப் பென்ஸிகர், சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து ரசாயனம் தடவிய 5,000 ரூபாயை, ஜோசப் பென்ஸிகர் கொடுத்த போது, மறைந்திருந்த போலீசார் சவுந்தர்ராஜனை கையும் களவுமாக கைது செய்தனர். இவ்வழக்கு, செங்கல்பட்டு தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில், நீதிபதி ஜெயஸ்ரீ முன்னிலையில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், சவுந்தர்ராஜனுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், 20,000 ரூபாய் அபராதமும், கட்டத் தவறினால், கூடுதலாக ஒரு மாதம் சிறை தண்டனையும் விதித்து, நீதிபதி ஜெயஸ்ரீ நேற்று தீர்ப்பளித்தார்.