ஆழ்வார் பேட்டையில் 22 மாடி குடியிருப்பு ஏ.எஸ்.வி., நிறுவனம் கட்டுகிறது
சென்னை, சென்னை, ஆழ்வார்பேட்டை, சி.பி.ராமசாமி சாலையில், 22 மாடி குடியிருப்பு கட்ட ஏ.எஸ்.வி., என்ற தனியார் கட்டுமான நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுக்கமாடி குடியிருப்புகள் வருகை வெகுவாக அதிகரித்துள்ளது. இதில், குறைந்த, நடுத்தர வருவாய் பிரிவினர் மட்டுமல்லாது, ஆடம்பர வசதிகளுடன் உயர் வருவாய் பிரிவினருக்கான குடியிருப்புகள் அதிகரித்துள்ளன.
குறிப்பாக, தேனாம்பேட்டை, போயஸ் கார்டன், ஆழ்வார்பேட்டை, ராஜா அண்ணாமலைபுரம், மயிலாப்பூர், அண்ணா சாலை போன்ற இடங்களில், ஆடம்பர வசதிகளுடன் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகரித்துள்ளன.
இங்கு நிலத்தின் விலை வெகுவாக உயர்ந்து வரும் நிலையில், ஆடம்பர வசதியுள்ள வீடுகளின் விலையும் வெகுவாக உயர்ந்துள்ளது. ஆழ்வார்பேட்டை சி.பி. ராமசாமி சாலையில், ஏற்கனவே 18 மாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. இப்பகுதியில் வீடு வாங்க, போட்டி நிலவுகிறது.
இதை தொடர்ந்து, பழைய அடையாறு கேட் ஹோட்டல் இருந்த இடத்தை வாங்கிய பாஷ்யம் கட்டுமான நிறுவனம், அங்கு 26 மாடி குடியிருப்பு கட்டும் பணிகளை துவக்கி உள்ளது.
இந்நிலையில், ஆழ்வார்பேட்டை, சி.பி. ராமசாமி சாலையில், 22 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தை செயல்படுத்த, ஏ.எஸ்.வி., கட்டுமான நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதற்கான திட்ட அனுமதி பெறுவதற்கான பூர்வாங்க பணிகளில், அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இத்திட்டம், சி.பி. ராமசாமி சாலையில் புதிய அடையாளமாக மாற வாய்ப்புள்ளது என ரியல் எஸ்டேட் சொத்து மதிப்பீட்டாளர்கள் தெரிவித்தனர்.