கொசு ஒழிப்பு இயந்திரம் நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி ரூ.2.06 கோடி மதிப்பீட்டில் மேயர் தொடங்கி வைத்தார்
சென்னை: சென்னை மாநகராட்சி பகுதிகளில் கொசுக்கள் மற்றும் கொசுப்புழுக்களை ஒழிக்கும் வகையில் மாநகராட்சி சார்பில் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, கொசுக்களை கட்டுப்படுத்தும் பணிகளில் 938 நிரந்தர பணியாளர்கள், 2,446 தற்காலிக பணியாளர்கள் என மொத்தம் 3,384 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், கொசு ஒழிப்பு பணியை தீவிரப்படுத்தும் விதமாக, மேயரின் நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி, கொசுப்புழுவை கட்டுப்படுத்த தலா ரூ.4.20 லட்சம் மதிப்பில் மொத்தம் ரூ.1.26 கோடி மதிப்பில் 30 வாகனங்களில் புகைப்பரப்பும் இயந்திரங்களும், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட நீர்வழிப்பாதைகளில் மருந்து தெளிக்கும் வகையில் ரூ.80 லட்சம் மதிப்பில் 15 வாகனங்களுடன் கூடிய கொசுக்கொல்லி மருந்து தெளிக்கும் இயந்திரங்களும் என மொத்தம் ரூ.2.06 கோடி மதிப்பில் கொசு ஒழிப்பு இயந்திரங்களை மேயர் பிரியா நேற்று பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், துணை மேயர் மகேஷ்குமார், ஆணையர் குமரகுருபரன், கூடுதல் ஆணையர் ஜெயசந்திர பானு ரெட்டி, மாமன்ற ஆளுங்கட்சி தலைவர் ராமலிங்கம், நிலைக்குழு தலைவர் (பொதுசுகாதாரம்) சாந்தகுமாரி, தலைமை பூச்சி தடுப்பு அலுவலர் செல்வகுமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.