கழிவுநீரை முறையாக கையாளாத கட்டடங்களுக்கு.. .கடிவாளம்!: நான்கு துறைகள் இணைந்து கண்காணிக்க திட்டம்

அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து சுத்திகரிக்காமல் கழிவுநீர் வெளியேற்றுவதை தடுக்க, அரசு சிறப்பு குழுவை அமைத்துள்ளது. மாசு கட்டுப்பாட்டு வாரியம், குடிநீர் வாரியம், சி.எம்.டி.ஏ., மற்றும் சென்னை மாநகராட்சி ஆகியவை குழுவாக ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளன. கழிவுநீர் பிரச்னையை தீர்க்க திட்டங்களை உருவாக்கவும், விதிமீறலில் ஈடுபடும் குடியிருப்புகளுக்கு அபராதம் விதிப்பு உள்ளிட்ட தண்டனைகள் வழங்கவும், இக்குழுவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது.

சென்னை மாநகராட்சி 426 சதுர கி.மீ., பரப்பு உடையது. இங்கு, 7.70 லட்சத்திற்கும் மேற்பட்ட கட்டடங்கள் உள்ளன.

இதில், 50,000க்கும் மேற்பட்ட கட்டடங்கள், பல அடுக்கு கொண்டவை. இதில், 50 வீடுகளுக்கு அதிகமான குடியிருப்பு உடைய மற்றும் 32,000 சதுர அடிக்கு மேல் கொண்ட, 15,000க்கும் மேற்பட்ட வணிக கட்டடங்கள் உள்ளன.

இவற்றில் கழிவுநீர் கட்டமைப்பு ஏற்படுத்தினாலும், அவற்றை முறையாக சுத்திகரிப்பு செய்து கழிவுநீரை வெளியேற்றுவதில், அவற்றின் நிர்வாகங்கள் அலட்சியம் காட்டுகின்றன.

அடுக்குமாடி கட்டடங்களின் கழிவுநீரை சுத்திகரித்து, அதே வளாகத்திற்கு பயன்படுத்த வேண்டும். மீதமாகும் நீரை, மாநகராட்சி குழாய் இணைப்பில் அனுமதி பெற்று, கழிவுநீரை வெளியேற்ற வேண்டும்.

இது போன்ற விதிகளை பின்பற்ற வேண்டும் என, அடுக்குமாடி குடியிருப்பு கட்டும்போது, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ., தெளிவாக குறிப்பிட்டிருந்தாலும், அதை யாரும் பின்பற்றுவதில்லை.

அதனால், பல குடியிருப்புகளில் சுத்திகரிப்பு இயந்திரத்தை இயக்காமல், நேரடியாக குழாயில் கழிவுநீரை விடுகின்றனர்.

தவிர, குடியிருப்பு வளாகத்தில் தண்ணீரை தேக்கி, மழைக்காலத்தில் ஓடும் வெள்ள நீருடன் கழிவுநீரை திறந்துவிடுகின்றனர்.

இதனால், குழாய் கொள்ளளவை மீறி செல்லும் கழிவுநீரால், சுகாதார பிரச்னை ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காணக்கோரி, பல தரப்பில் இருந்தும் புகார் எழுந்தது.

இது தொடர்பான வழக்கு ஒன்றில், ‘அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்களில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் சிறப்பாகச் செயல்படுவதை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்’ என, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது.

மேலும், தமிழக அரசு தலையிட்டு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில், அடுக்குமாடி கட்டடங்களில் கழிவுநீரை கையாளுவதை கண்காணிக்க குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

விதிமீறும் கட்டடங்களுக்கு அபராதம், தண்டனை போன்றவற்றை விதிக்கவும், தேவையான திட்டங்களை உருவாக்கவும், அக்குழுவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது.

இக்குழுவில், மாசு கட்டுப்பாட்டு வாரியம், குடிநீர் வாரியம், சி.எம்.டி.ஏ., மற்றும் மாநகராட்சி ஆகிய துறை அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.

அவர்கள், அடுக்குமாடி குடியிருப்பால் ஏற்படும் கழிவுநீர் பிரச்னையை கையாள்வதற்கான பணிகளில் ஈடுபடுவர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

அடுக்குமாடி குடியிருப்பு, வணிக நிறுவனங்களில் பயன்படுத்தும் தண்ணீரில், 80 சதவீதம் கழிவுநீராக வெளியேறுகிறது.

ஐம்பது வீடுகள் அடங்கிய குடியிருப்புகளுக்கு மேல் மற்றும் 32,000 சதுர அடிக்கு மேல் உள்ள வணிக கட்டடங்களில் கையாளும் கழிவுநீரை சுத்திகரித்து கழிப்பறை, பூங்கா பராமரிப்பு, தீயணைப்பு உள்ளிட்ட தேவைகளுக்கு பயன்படுத்த வேண்டும்.

கட்டடங்களின் பரப்பை பொறுத்து, எத்தனை திறன் உடைய சுத்திகரிப்பு இயந்திரம் அமைக்க வேண்டும் என, சி.எம்.டி.ஏ., அனுமதி வழங்குகிறது.

இதில், 2 லட்சம் சதுர அடிக்கு மேல் உடைய கட்டடங்களில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் கண்காணிக்கிறது.

ஆனால், 2 லட்சம் சதுர அடிக்கு கீழ் உள்ள கட்டடங்களை கண்காணிப்பது எந்த துறை என்பதில், இதுவரை தெளிவு இல்லை. இதனால், அந்த கட்டடங்களில் விதிமீறல் அதிகரித்து வருகிறது.

இதனால், அடுக்குமாடி குடியிருப்பை கண்காணிப்பது எந்த துறை, சுத்திகரிக்காத கழிவுநீரை குடியிருப்பு வளாகத்தில் இருந்து வெளியேற்றினால் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்டவை குறித்து ஆராயப்பட உள்ளது.

இதற்காக, மாசு கட்டுப்பாட்டு வாரியம், குடிநீர் வாரியம், சி.எம்.டி.ஏ., மற்றும் மாநகராட்சி இணைந்து நடவடிக்கை எடுக்கவுள்ளன.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைச் சேர்ந்த, சி.எம்.டி.ஏ.,வின் எல்லை, 1,189 சதுர கி.மீ., பரப்பு கொண்டது. இது, 5,904 சதுர கி.மீ., பரப்பாக விரிவாக்கம் அடைகிறது. இங்கும், பல்லடுக்கு கட்டடங்கள் அதிகரித்து வருகின்றன. இங்கும், கழிவுநீர் பிரச்னைக்கு குழு அமைக்கப்படுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

குழாயில் மோட்டார் பொருத்தி குடிநீரை உறிஞ்சுதல், லாரி கழிவுநீரை சட்ட விரோதமாக வெளியேற்றினால் அபராதம் விதிக்க, எங்களுக்கு அதிகாரம் உள்ளது. கழிவுநீரை வடிகாலில் விட்டால், மாநகராட்சி மட்டுமே அபராதம் விதிக்கும். இதனால், அடுக்குமாடி குடியிருப்பில் கழிவுநீர் கையாளுவதை கண்காணிப்பதில் சிக்கல் நீடிக்கிறது. குழு அமைத்துள்ளதால், கண்காணிப்பு, தண்டனை வழங்கும் அதிகாரம் பரவலாக்கப்படும் என எதிர்பார்க்கிறோம். இதனால், அடுக்குமாடி கழிவுநீரை கையாளுவதில் தீர்வு கிடைப்பதுடன், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும்.

– குடிநீர் வாரிய அதிகாரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *