சிஐ எஸ் எப் தீயணைப்பு துறைக்கு புதிதாக 1300 வீரர்கள் தேர்வு: இயக்குனர் ஜெனரல் தகவல்
தண்டையார்பேட்டை: இந்தியா முழுவதும் உள்ள தொழிற்சாலைகள், முக்கிய பாதுகாப்பு நிறுவனங்களில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த பிரிவில் புதிதாக தீயணைப்பு வீரர்கள் பிரிவு கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. அதன்படி இந்தியா முழுவதும் இருந்து 1300 தீயணைப்பு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்காக சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டது. அந்த பயிற்சி ஐதராபாத்தில் 27 வாரங்கள் நடந்தது
அதில் நவீன தீயணைப்பு கருவிகள் எவ்வாறு பயன்படுத்துவது, திடீர் தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு அணைப்பது குறித்து நவீன முறை பயிற்சி ஐதராபாத்தில் அளிக்கப்பட்டது. அதேபோல் சிஐஎஸ்எப் வீரர்கள் தேர்வின் போது செய்யும் பயிற்சிகள் 15 வாரம் நடத்தப்பட்டது. தற்போது 47 வாரம் பயிற்சி முடிந்த 1300 வீரர்கள் இந்தியா முழுவதும் பணி அமர்த்தப்பட உள்ளனர்.
இவர்கள் பேரிட காலங்களில் எப்படி செயல்படுவது, பாதிக்கப்பட்ட மக்களை காப்பது குறித்து பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை சேலத்தில் உள்ள இரும்பு உருக்கு ஆலையில் பணி அமர்த்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர், அடுத்த வாரம் நாடு முழுவதும் தேர்வு செய்யப்பட்ட தீயணைப்பு வீரர்கள் 1300 பேர் பணி அமர்த்தப்படுவார்கள். இவர்கள் பேரிட காலங்களில் மீட்பு பணிகளிலும் ஈடுபடுவார்கள் என மத்திய தொழில் பாதுகாப்பு படை இயக்குனர் ஜெனரல் தெரிவித்தார்.