சோலார் வசதியுடன் சிக்னல்கள் ரூ.5 கோடி ஒதுக்கியது சி.எம்.டி.ஏ.,
சென்னை,சென்னையில் பேருந்துகள் செல்லும் பெரும்பாலான சாலைகளில், போக்குவரத்தை ஒழுங்குபடுத்த, சிக்னல் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன
அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, காமராஜர் சாலை போன்ற முக்கியமான இடங்களில் சிக்னல் விளக்குகள், 24 மணி நேரமும் செயல்பட வேண்டியது அவசியமாகிறது.
இந்த விளக்குகள் சிறிது நேரம் செயல்படாவிட்டாலும், அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக மின்சாரம் தடைபடும் சமயங்களில், சிக்னல் விளக்குகள் செயல்படாமல் முடங்குகின்றன. அப்போது, போக்குவரத்து காவலர்களே வாகனங்களை ஒழுங்குபடுத்த வேண்டியுள்ளது.
எனவே, போக்குவரத்து சிக்னல்கள் எவ்வித தடையும் இன்றி செயல்பட, சூரிய சக்தி மின் உற்பத்தி வசதியை ஏற்படுத்த, சி.எம்.டி.ஏ., திட்டமிட்டுள்ளது. இப்பணிகளுக்காக முதற்கட்டமாக, ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னை பெருநகரில், அண்ணா சாலை போன்ற முக்கியமான சாலைகளில் அதிக வாகனங்கள் கடக்கும் சிக்னல்கள், இதற்காக தேர்வு செய்யப்பட உள்ளன.
போக்குவரத்து காவல் துறையுடன் இணைந்து, இதற்கான பூர்வாங்கப் பணிகள் துவக்கப்பட்டு உள்ளதாக, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் தெரிவித்தனர்.=