விண்வெளித்துறையில் தமிழர்களின் பங்களிப்பு அதிகரிப்பு- விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை

மண்ணும், மரபும் நிகழ்ச்சி

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் காந்தி உலக மையத்தின் சார்பில் நேற்று மண்ணும், மரபும் என்கிற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சந்திராயன் திட்ட இயக்குனர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கொரோனாவுக்கு பிறகு உலகம் தனது இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டிருக்கிறது. கொரோனா சமயத்தில் பல தொழில்கள் மந்த நிலையை அடைந்தாலும், விண்வெளித்துறையில் இந்த இரண்டரை வருடங்களில் தான் மிக அதிகமாக செயற்கை கோள்கள் அனுப்பப்பட்டு இருக்கிறது. அதனை தாண்டி வருங்காலங்களில் இன்னும் அதிகமாக அனுப்பிட வாய்ப்பு உள்ளது.

காரணம் செயற்கை கோள் மூலமாக ஏற்படுத்த கூடிய புது வகை தொழில் நுட்பங்கள் உலகலாவிய வகையில் எல்லா கருவிகளையும் இணைக்கும். அதாவது விவசாயம் முதல் விண்வெளி வரை பல துறைகளில் அதன் பயன்கள் சிறப்பாக சென்றடைவதற்கான வாய்ப்புகள் உருவாகி இருக்கிறது.

சிறப்பான ஏவுதளம்

அப்படி உருவாகும் போது, விண்வெளிக்கான செயற்கைகோளை பராமரிப்பதும், விண்வெளிக்கு அனுப்பப்பட்ட செயற்கை கோள்கள் அதனுடைய ஆயுட்காலம் முடிவடைந்த பிறகு அவற்றை எப்படி பத்திரமாக மீட்பது? அதனுடைய இடத்தில் மற்ற செயற்கை கோளை எப்படி அனுப்புவது? என்பது போன்ற புது வகையான ஆராய்ச்சிகளும், அப்பணிக்கான வாய்ப்புகளும் உருவாகும்.

அதே சமயத்தில், இப்போது நமது தமிழ்நாட்டிலே, இந்தியாவிலே ஸ்ரீஹரிகோட்டாவிற்கு அடுத்து குலேசேகரபட்டினத்தில் வரக்கூடிய ஏவுதளம் உலக அளவிலேயே சிறப்பாக ஏவுதளமாக உருவாக வாய்ப்பு உள்ளது. அறிவியல் சார்ந்து மிகச்சிக்கனமாக அங்கிருந்து ஏவுகனைகளை அனுப்ப வாய்ப்புகள் இருக்கிறது.

அதையொட்டி சிறு செயற்கை கோள்களை நாமும் செய்வதற்கு வாய்ப்புகள் அங்கு உருவாக்க முடியும். அப்படி உருவாக்கும் போது எல்லா அங்கங்களையும் ஒருங்கிணைந்த ஒரு புது இந்திய விண்வெளி என்கிற நிலைமை வர வாய்ப்புகள் உள்ளது.

தமிழர்களின் பங்கு அதிகரிப்பு

இந்த வகையில் கொரோனாவிற்கு பிறகு உலக விண்வெளியினுடைய தொழில் வர்த்தக ரிதியாகவும், மற்ற வகையிலும் தொழில்நுட்பம் முன்னேறுகிறதோ அதே வகையில் இந்தியாவினுடைய விண்வெளித்துறையும் முன்னேறுகிற வாய்ப்புகள் அதிகம்.

இப்போது இந்திய விண்வெளித்துறையில் தமிழர்களின் பங்களிப்பு அதிகரித்து உள்ளது. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டு உலகளவில் ஒரு சிறப்பான இடத்தை நாம் பெறுவதற்கான வாய்ப்புகள் உருவாகும் என நினைக்கிறேன்.

இவ்வாறு மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *