மதுவை பங்கு பிரிப்பதில் தகராறு கத்தியால் வெட்டிய சிறுவன் கைது
புளியந்தோப்பு, ஓட்டேரியை சேர்ந்தவர் கார்த்திகேயன், 30. நேற்று முன்தினம் இரவு புளியந்தோப்பு நெடுஞ்சாலையில் காவல்நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மது குடிக்க சென்றுள்ளார்.
மது வாங்க பாதி பணம் இருந்த நிலையில், பங்கு போட்டு குடிக்க யாராவது கிடைக்க மாட்டார்களா என, டாஸ்மாக் வாயிலில் காத்திருந்தார். அப்போது புளியந்தோப்பை சேர்ந்த 16 வயது சிறுவன், கார்த்திகேயனுடன் மதுவாங்கி பங்கு பிரித்துக் கொள்ள சம்மதித்துள்ளார். இதற்காக, கார்த்திகேயனிடம், அந்த சிறுவன் 100 ரூபாய் கொடுத்துள்ளார்.
ஆனால், கார்த்திகேயனோ பணத்தை வாங்கிக் கொண்டு, மதுவை சரியாக பங்கிட்டு தரவில்லை என, இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. சிறுவனை, கார்த்திகேயன் தரக்குறைவாக பேசியுள்ளார்.
இதனால் கோபத்துடன் வீட்டுக்கு சென்ற சிறுவன், கத்தியுடன் திரும்பி வந்து, டாஸ்மாக் கடை எதிரே மது போதையில் நடைபாதையில் படுத்திருந்த கார்த்திகேயனின் தலையில் சரமாரியாக வெட்டினார்.
இதில், கார்த்திகேயனுக்கு ஐந்து இடத்தில் வெட்டு விழுந்தது. தகவல் கிடைத்து, சம்பவ இடம் விரைந்த புளியந்தோப்பு போலீசார், கார்த்திகேயனை மீட்டு ஸ்டான்லிக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு 25 தையல் போடப்பட்டது.
இதையடுத்து, நேற்று காலை 16 வயது சிறுவனை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.