ஜி.பி.எஸ்., கருவியுடன் வந்த பிரான்ஸ் பயணி பயணம் ரத்து
சென்னை, சென்னை விமான நிலையத்தில் இருந்து, பெங்களூரு செல்லும் இண்டிகோ பயணியர் விமானம், நேற்று முன்தினம் இரவு புறப்படத் தயாரானது.
விமானத்தில் பயணம் செய்ய வந்தவர்கள், போர்டிங் மற்றும் பாதுகாப்பு சோதனைகள் முடித்து, விமானத்திற்காக காத்துக் கொண்டிருந்தனர்.
அந்த விமானத்தில் பயணம் செய்ய, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெர்னார்ட், 62, என்பவர் வந்திருந்தார்.
அவரது கைப்பையை, சி.ஐ.எஸ்.எப்., அதிகாரிகள் சோதனை செய்தபோது, அதில் ஜி.பி.எஸ்., கருவி இருப்பதைக் கண்டனர்.
இந்தியாவில் எந்த விமானத்திலும், ஜி.பி.எஸ்., கருவி எடுத்து செல்ல, அனுமதி கிடையாது. இது குறித்து அவரிடம் விசாரித்தனர். அவர் சுற்றுலாவுக்காக, நேபாளம், டில்லி வழியாக சென்னை வந்துள்ளார்.
மற்ற விமான நிலையங்களில், ஜி.பி.எஸ்., கருவி குறித்து, யாரும் எதுவும் கேட்கவில்லை என தெரிவித்துள்ளார். அதை அதிகாரிகள் ஏற்கவில்லை.
அவரிடம் இருந்த கருவியை பறிமுதல் செய்ததுடன், அவரது பயணத்தை ரத்து செய்தனர். அவர், சென்னை விமான நிலையப் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். போலீசார், அவரிடம் விசாரித்து வருகின்றனர்.