ரசிகர்களை பரவசப்படுத்திய அனாஹிதா, அபூர்வா சகோதரிகள்
கர்நாடக வாய்ப்பாட்டுக் கலைஞர்கள் அனாஹிதா, அபூர்வா சகோதரிகளின் இசைக் கச்சேரி, தி.நகர் வாணி மஹாலில் நடந்தது. பந்துவராளி வர்ணம், ஆதி தாளத்தில் அமைத்து, ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தினர்.
அடுத்து, ஷியாமா சாஸ்திரி இயற்றிய, ‘பாஹி ஸ்ரீ கிரிராஜ சுதே’ கீர்த்தனையை சிந்து பைரவி ராகம், ரூபக தாளத்தில் பாடும்போது, உள்ளத்தினுள் ஆனந்தம் பொங்கியது. இதில், அவர்கள் பயன்படுத்திய பிரயோகங்கள், பாடலுக்கு பலம் சேர்த்தன.
தொடர்ந்து, பட்டணம் சுப்பிரமணிய அய்யரின், ‘மரிவேரே திக்கெவரய்யா’ எனும் கீர்த்தனையை, சண்முகப்பிரியா ராகம், ஆதி தாளத்தில் பாடிய விதம், பரவசத்திலும், ஆனந்தப் பெருக்கிலும் இருந்த ரசிகர்களுக்கு, பக்தி எனும் சுவையை ஊட்டியது.
அந்த அளவிற்கு, தெளிந்த நீரோடையின் தன்மை போல, அவர்களின் குரலில் வெளிப்பட்ட பக்தியின் தெளிவை உணர முடிந்தது. அடுத்து எடுத்துக்கொண்டது, ‘ஓ ரங்க சாயீ’ எனும் தியாகராஜர் இயற்றிய கீர்த்தனை. இதை, கம்போதி ராகம், ஆதி தாளத்தில் அமைத்து மிகவும் விஸ்தாரமாக பாடி ரசிகர்களுக்கு விருந்து வைத்தனர். இருவரும் ஒருமித்த பரிமாணத்தில் மேடையை அலங்கரிப்பதும், கையாளும் விதமும் காண்போரை கவர்ந்தது.
பக்கவாத்தியங்களின் பங்கு கவனம் பெற்றது. மிருதங்கத்தில் மேலகாவேரி பாலாஜி, கடம் சிவராமகிருஷ்ணனின் வாசிப்புக்கு, ‘பலே பலே’ சொல்ல வேண்டும்.
இதையடுத்து, துளசிதாசரின், ‘கோபால கோகுல’ பஜனையை, வல்லபியில் மிஸ்ரசாபுவில் அமைத்து சகோதரிகள் பாடும்போது, அரங்கத்தில் தெய்வீக ராக ஸ்வரங்களை சிதறடித்தது போல அனைவரும், சித்தி நிலைக்கே சென்றிருந்தனர்.
இதற்கு கோகுல், தன் வயலின் வித்தையில் வசந்தத்தை அரங்கத்திற்குள் வரவேற்று, ரசிகர்களின் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தார். கொஞ்சிப் பாடிய பாடகிகளின் திறமையைச் சொல்ல, சிறிதும் இடைவெளியின்றி, கைத்தட்டி ரசித்த ரசிகர்களின் காட்சியே அதற்கு சாட்சி.
– நமது நிருபர் –