புத்தகங்கள் என்ன செய்யும்? அவை எண்ணச் செய்யும்! – ஜெயம் கொண்டான்

சென்னையில் நடந்து வரும் புத்தகக் காட்சி வெளி அரங்கில், ‘புரட்டிப் போடும் புத்தகங்கள்’ எனும் தலைப்பில், ஜெயம்கொண்டான் பேசியதாவது:

புத்தகங்கள் நம் இல்லத்தில் இருந்தால் போதாது. அவை, நம் உள்ளத்தில் இருக்க வேண்டும். அப்போதுதான், வாழ்க்கையில் பள்ளங்கள் உருவாகாமல் தவிர்க்க முடியும்.

‘புத்தகங்கள் என்ன செய்யும்’ என்று கேட்போருக்கு ‘புத்தகங்கள் எண்ணச் செய்யும்’ என பதிலுரையுங்கள்.

புகழ் வேறு, பெருமை வேறு என்பதை வேறுபடுத்திக் காட்டியவர் வள்ளுவர். பெறுவது அனைத்தும் பெருமை. கொடுப்பதே புகழ் என்கிறார் வள்ளுவர்.

அதிகமாக பணம் சம்பாதிப்பவர்கள், உலக வங்கியில் பணத்தை முதலீடு செய்ய வேண்டும். உலகத்தின் மிகப்பெரிய வங்கி, ஏழைகளின் வயிறு. எனவே, அதிகமாக சம்பாதிப்பவர்கள், தங்களிடம் உபரியாக உள்ள பணத்தை வைத்து ஏழைகளின் வயிற்றை நிரப்ப வேண்டும். இதை அக்காலத்திலேயே உரைத்தவர் வள்ளுவர்.

படித்தால் வருவது அறிவு கிடையாது. மற்றவரின் துன்பத்தைக் கண்டு துயரம் கொண்டு, உதவிக்கரம் நீட்டுபவரே உண்மையான அறிவு படைத்தவர் என்கிறார் வள்ளுவர்.

திருக்குறள் என்பது, காலத்தால் அழியாத, காலாவதியாகாத கருத்து மாத்திரைகள் அடங்கிய நுால். எனவே திருக்குறள் ஒப்புவித்தல் நிகழ்ச்சியை அனைத்து பள்ளிகளிலும் துவங்க வேண்டும். உங்கள் வீட்டில் குழந்தைகளுக்கு எட்டும் உயரத்தில் புத்தகங்கள் இருந்தால், வாழ்க்கையில் எட்டாத உயரத்தை அவர்கள் அடைவர்.

நீதி நுால்களை மனனம் செய்யும் குழந்தைகள், வளர் இளம் பருவத்தில் தவறுகள் செய்யமாட்டார்கள். நம்மை மேல்நோக்கி வளர்ப்பவை புத்தகங்கள்தான். நம் அறிவுக்கு உணவாக அமைவதும் புத்தகங்கள்தான்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *