வடபழனி முருகன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
வடபழனி, சென்னை காவல் கட்டுப் பாட்டு அறை எண்ணிற்கு, நேற்று முன் தினம் நள்ளிரவு 12:15 மணியளவில் தொடர்பு கொண்ட மர்ம நபர், வடபழனி முருகன் கோவிலில் வெடிகுண்டு வைத்துள்ளதாக கூறி இணைப்பை துண்டித்தார்.
இது குறித்து, தேனாம்பேட்டை உதவி கமிஷனர் ஆரோக்கிய ரவீந்தரன் மற்றும் வடபழனி குற்றப்பிரிவு ஆய்வாளர் அமுதா ஆகியோர் விசாரித்தனர். மோப்ப நாய் பைரவா மற்றும் வெடிகுண்டு தடுப்பு போலீசார், விடிய விடிய கோவிலை சுற்றி சோதனை மேற்கொண்டனர்.
அதிகாலை 4:00 மணிக்கு கோவில் திறக்கப்பட்டவுடன், உள்ளே சென்று சோதனை மேற்கொண்டனர். 4:30 மணியளவில் சோதனை முடிந்த நிலையில், வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.
வெடி குண்டு மிரட்டல் விடுத்தவர் குறித்து, வடபழனி போலீசார் விசாரித்தனர். இதில், மிரட்டல் விடுத்த நபர், திருவல்லிக்கேணியைச் சேர்ந்த விவேக் மாரன், 35, என்பதும், தற்போது, தரமணி, ஸ்ரீராம் நகர் 2வது தெருவில் வசிப்பதும் தெரியவந்தது.
மேலும், தர்மாம்பாள் அரசு பெண்கள் பாலிடெக்னிக் கல்லுாரியில் இளநிலை உதவியாளராக பணிபுரிவதும் தெரிய வந்தது.
விவேக் மாரனை போலீசார் கைது செய்து விசாரித்ததில், மது போதையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.