மணலி புதுநகர் பிரதான கால்வாய் இருபுறத்திலும் இரும்பு தடுப்பு
மணலிபுதுநகர், மணலிபுதுநகர் பிரதான கால்வாய்க்கு, இரும்பு தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி, மணலி மண்டலத்தில் உள்ள பகுதிகள் , 2015ல் ஏற்பட்ட பெருவெள்ளத்தின் போது, கொசஸ்தலை உபரி நீரால் கடுமையாக பாதிக்கப்பட்டது.
குறிப்பாக, மணலிபுதுநகர், பால் பூத் – மகாலட்சுமி நகர் வரையிலான, சி.எம்.டி.ஏ., பிரதான கால்வாய் துார்வாரப்படாமலும், கரை இன்றி இருந்ததால், 15 வது வார்டு முழுதும், வெள்ளநீரில் மூழ்கியது.
இதையடுத்து ஆசிய வளர்ச்சி வங்கி நிதி 3,220 கோடி ரூபாய் செலவில், 768 கி.மீ., துாரத்திற்கு, 40 தொகுப்புகளாக, மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடந்தன.
அதன் ஒரு பகுதியாக, பால் பூத் – மகாலட்சுமி நகர் வரையிலான, மணலி புதுநகர் சி.எம்.டி.ஏ., பிரதான கால்வாய், துார்வாரப்பட்டு, 30 அடி அகலம், ஏழு அடி உயரத்தில், ‘ப’ வடிவ கான்கிரிட் கால்வாய், ஒரு கி.மீ., துாரத்திற்கு அமைக்கப்பட்டது.
கான்கிரிட் கால்வாய் உயர்ந்ததால், குடியிருப்புகளை இணைக்கும் வகையில், ஐந்து இடங்களில் இருந்த தரைப்பாலங்கள் தாழ்வாகி போனது.
இதனால், தாழ்வாக இருக்கும் தரைப்பாலங்கள் வழியாக, வெள்ளநீர் ஊருக்குள் உட்புகும் அபாயம் நிலவியது. தொடர்ந்து, தரைப்பாலங்களும் உயர்த்தப்பட்டன.
இதற்கிடையில், கால்வாயில் பிளாஸ்டி குப்பையை கொட்டி விடுவதால், அவற்றை அகற்றுவதில் சிரமம் ஏற்படுகிறது. மேலும், ராட்சத கால்வாயில் வெள்ளநீர் ஆர்ப்பரிக்கும் போது, வேடிக்கை பார்ப்பவர்கள் தவறி விழுந்து உயிர்பலி ஏற்பட கூடும் என்ற அச்சம் நிலவியது.
இந்நிலையில், கான்கிரிட் சுவற்றின் இருபுறமும், 1.5 – 2 அடி உயரத்திற்கு இரும்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், குப்பை கொட்டப்படுவது தவிர்க்கப்படும். வெள்ளகாலத்தில் உயிர்பலி ஏற்படாது என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.