கிடப்பில் கொசு ஒழிப்பு பணி திருவான்மியூர் வாசிகள் தவிப்பு
திருவான்மியூர், அடையாறு மண்டலம், 180வது வார்டு, திருவான்மியூர், தெற்குமாட வீதியில், நுாற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு, மூன்று மாதமாக கொசு தொல்லை அதிகமாக உள்ளது.
இந்த தெருவில் உள்ள தொட்டியில் குப்பை அள்ளியபின், அந்த இடத்தை சுத்தம் செய்வதில்லை.
அதில் இருந்து கழிவுநீர் வடிந்து, வீட்டு வாசலில் தேங்கி, சுகாதார சீர்கேடு ஏற்படுத்துகிறது. அங்குள்ளவர்கள் வெளியே நடந்து செல்ல முடியாத நிலையும் ஏற்படுகிறது.
பகுதிவாசிகள் கூறியதாவது:
பருவமழை துவங்கியபின், கொசு ஒழிப்பு மருந்து தெளிப்பது, புகை போடுவது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
இரவில் கொசுக்கடியால், துாக்கம் இல்லாமல் தவிக்கிறோம். குழந்தைகள், கர்ப்பிணியர், நோய் பாதித்தவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
கடற்கரை சாலையில் உள்ள குப்பை தொட்டிகளை, தெற்குமாட வீதியில் வைத்ததால், தொட்டி நிரம்பி சுகாதார பாதிப்பு ஏற்படுகிறது. குப்பையை கையாளுவதில் அலட்சியமாக செயல்படுகின்றனர்.
சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் பலமுறை கூறியும், அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. கொசுக்கடியும், குப்பையும் நோய் பாதிப்பு ஏற்படுத்துவதால், தடுப்பு நடவடிக்கை அவசியம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.