தி. நகர் பஸ் நிலையத்தில் சக்கரத்தில் சிக்கி மூதாட்டி பலி
தி.நகர், தி.நகரில் இருந்து கோயம்பேடு செல்லும் தடம் எண்: எம் 27 மாநகர பேருந்து, நேற்று இரவு தி.நகர் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டது.
அப்போது, பேருந்து நிலையத்தில் நடந்து சென்ற 70 வயது மூதாட்டி மீது, அப்பேருந்து மோதியது. இதில் விழுந்த மூதாட்டி மீது பேருந்தின் முன் சக்கரம் ஏறியது.
சம்பவ இடத்திலேயே மூதாட்டி உயிரிழந்தார். ஆனால், அவரது உடல் பேருந்து சக்கரத்தில் சிக்கி கொண்டது. உடலை போலீசாரால் மீட்க முடியவில்லை.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் உடலை மீட்டனர்.
இதையடுத்து, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த மூதாட்டி குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
மேலும், பேருந்து ஓட்டுநர் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த தனசீலன், 52, மற்றும் நடத்துநரான அம்பத்துாரைச் சேர்ந்த ராகவன், 54, ஆகியோரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.