பெருங்களத்துாரில் சாலையில் மரண பள்ளங்களால் விபத்து அபாயம்
பெருங்களத்துார்: பெருங்களத்துாரில், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இதில், நெடுங்குன்றம் மார்க்கமான பாதை மட்டும் இன்னும் முடியவில்லை. மற்ற பாதைகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன.
இதனால், ஜி.எஸ்.டி., சாலை வழியாக செல்லும் பெரும்பாலான வாகனங்கள், மேம்பாலத்தில் ஏறி இறங்குகின்றன.
மேம்பாலத்தை திறந்ததால், ஜி.எஸ்.டி., சாலையை மறந்துவிட்டனர். இதனால், சாலை சீர்குலைந்து, போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் படுமோசமாக மாறிவிட்டது.
மேம்பாலத்தின் கீழ், தாம்பரம் மார்க்கமான சாலை சீர்குலைந்து, தொடர்ச்சியாக பள்ளம், மேடாகவும், ஆங்காங்கே மரண பள்ளங்களும் ஏற்பட்டுள்ளன.
நாள்தோறும் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு, பள்ளம் எங்குள்ளது என்பது தெரியும். அதனால், அவர்கள் பாதிக்கப்படுவதில்லை.
ஆனால், புதிதாக வரும் வாகன ஓட்டிகள், தொடர்ச்சியாக உள்ள மேடு, பள்ளங்களை சமாளித்தாலும், திடீர் திடீரென வரும் மரண பள்ளங்களில் சறுக்கி விழுந்து பாதிக்கப்படுகின்றனர்.
சிலர், திடீரென வரும் பள்ளத்தில் இருந்து விலகிச்செல்ல, வாகனத்தை வளைப்பதால் மற்ற வாகனங்கள் மீது மோதியும் விபத்தில் சிக்குகின்றனர்.
இதுகுறித்து, நெடுஞ்சாலைத் துறைக்கு புகார் தெரிவித்தும், சாலையை சீரமைப்பதில் போக்குவரத்து போலீசார் தீவிரம் காட்டுவதில்லை.
இதே நிலை நீடித்தால், மரண பள்ளங்கள் மேலும் பெரியதாகி, அதனால் விபத்துகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்பதில் மாற்றமில்லை.
எனவே, நெடுஞ்சாலைத் துறையினர் அலட்சியம் காட்டாமல், பெருங்களத்துார் ஜி.எஸ்.டி., சாலையில், சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.