மீன்கள் வரத்து அதிகரிப்பால் விலை குறைந்தது

சென்னை காசிமேடு மீன்பிடி சந்தையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களில் திருவிழா போன்று கூட்டம் அலை மோதுவது வழக்கம். நேற்று ஆடி மாதத்தின் 2-வது வார ஞாயிற்றுக்கிழமை என்பதால் காசிமேடு மீன் பிடித்துறைமுகம் சந்தை மக்கள் கூட்டத்தால் களைகட்டியது. ஆடி மாதத்தில் மக்கள், தங்கள் வீடுகளில் அம்மனுக்கு கூழ் வார்த்து படையலிடுவர். படையலில் முக்கிய உணவாக பங்களிப்பது மீன் வகை உணவுகள் மட்டுமே. ஆதலால் மீன்களை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டி காசிமேட்டில் மீன் வாங்க படை எடுத்தனர். கடந்த வாரத்தைவிட இந்த வாரம் மீன்கள் விலை ரூ.200 வரை குறைவாக விற்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கிச்சென்றனர்.

கடந்த வாரம் ரூ.1,300-க்கு விற்கப்பட்ட வஞ்சிரம் மீன் ரூ.950 முதல் ரூ.1,050 வரை விற்பனை செய்யப்பட்டது. ரூ.450-க்கு விற்ற சங்கரா மீன் ரூ.400-க்கும், ரூ.400-க்கு விற்கப்பட்ட கடம்பா ரூ.350-க்கும், ரூ.1,000-க்கு விற்கப்பட்ட டைகர் எறால் ரூ.950-க்கும், வெள்ளை வவ்வால் மீன் ரூ.1,000 முதல் ரூ.1,300 வரையும், ரூ.750-க்கு விற்ற கொடுவா ரூ.550-க்கும், மடவை ரூ.250, பாறை ரூ.450, களவான் ரூ.450, எறால் ரூ.400, கடல் விறால் ரூ.550-க்கும் விற்பனையானது. மீன்பிடி தடைகாலம் நிறைவு பெற்று ஒரு மாத காலமாகியும் கடந்த வாரங்களில் மீன்கள் விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது. தற்போது மீன் வரத்து அதிகமாக இருப்பதால் மீன்கள் விலை சற்று குறைந்து உள்ளது. மேலும் காசிமேடு மீன் சுவையாக இருக்கும் என்பதாலும் பொதுமக்கள் ஆர்வத்துடன் போட்டி போட்டு மீன்களை வாங்கிச் சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *