அனுமதியற்ற இணைய , ‘டிவி’ கேபிள்களுக்கு அபராதம் ரூ.ஒரு லட்சம்!: விதி மீறிய கம்பங்களை அகற்றவும் மாநகராட்சி முடிவு
சென்னை: சென்னை மாநகராட்சி சாலையில், அனுமதியற்ற இணைய, ‘டிவி’ கேபிள்கள் மற்றும் ஆங்காங்கே நடப்பட்டுள்ள அதற்கான கம்பங்களுக்கு, 1 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்க, மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதேபோல், அனுமதி பெறாத வழித்தட கேபிள்களை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிப்படி, 1 கி.மீ., கேபிள்களுக்கு, 1,000 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், சென்னையில் பெரும்பாலான பகுதிகளில், அனுமதி இல்லாமல் கேபிள்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அனுமதி பெற்று அமைக்கப்பட்ட கேபிள்களுக்கான தட வாடகையையும், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், ஓரிரு ஆண்டுகளுக்கு மேலாக மாநகராட்சிக்கு செலுத்தாமல் உள்ளன.
இதை தவிர, பல்வேறு இடங்களில் பழுதடைந்த அல்லது பயன்படுத்தாத இணைய மற்றும் தொலைகாட்சி கேபிள்களையும், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அகற்றாமல் வைத்துள்ளனர்.
அறிவுறுத்தல்
இதனால், மாநகராட்சியின் தெருவிளக்கு மின் கம்பங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அவை தொங்கி, அலங்கோலமாக காட்சியளிக்கின்றன. பல இடங்களில், வாகன ஓட்டிகளின் உயிர்களை காவு வாங்கும் வகையில் ஆபத்தான வகையில் கேபிள்கள் தொங்கியபடி உள்ளன.
ஏற்கனவே, ‘சிங்கார சென்னை – 2.0’ திட்டத்தில், மாநகரில் அலங்கோலமாக ஆங்காங்கே பிரதான சாலை முதல் உட்புற சாலை வரை தொங்கும் கேபிள்களை, மாநகராட்சி பணியாளர்கள் அகற்றினர்.
மேலும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களே தாமாக முன்வந்து அகற்றி கொள்ளவும், முடிந்த அளவிற்கு கேபிள்கள் புதை வழித்தடத்தில் கொண்டு செல்லவும் மாநகராட்சி வலியுறுத்தியது.
ஆனால், தொலைகாட்சி கேபிள் டிவி ஆப்ப ரேட்டர்கள், இணைய நிறுவனங்கள் உள்ளிட்டவை, மாநகராட்சியின் அறிவுறுத்தலை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.
இந்த முறைகேடில் ஈடுபட்டுள்ள பெரும்பாலான நிறுவனங்கள், அரசியல் கட்சிகளைச் சேர்ந்தோரின் நிறுவனங்களாக இருப்பதால், மாநகராட்சியும் பெரிதாக நடவடிக்கை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
நிலைக்குழு கூட்டம்
இந்நிலையில், சமீபத்தில் நடந்த பணிகள் நிலைக்குழு தொடர்பான கூட்டத்தில், சென்னை மாநகராட்சி எல்லையில் அனுமதி பெறாமல் உள்ள கேபிள்கள், அவற்றிற்கான கம்பங்கள் உள்ளிட்டவற்றிற்கு 1 லட்சம் ரூபாய்; அனுமதிக்கப்பட்ட அளவை தாண்டி
அமைத்திருந்தால் 75,000 ரூபாய்; ஒழுங்கற்ற முறையில் அமைத்திருந்தால், 50,000 ரூபாய் வரை அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவற்றை செயல்படுத்தவும் மாநகராட்சிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இவை, மாதாந்திர கவுன்சில் கூட்டத்தில் தீர்மானமாக கொண்டு வரப்படும் என, தகவல் வெளியாகி உள்ளது.
இதனால், மாநகராட்சியில் அலங்கோலமாகவும், அனுமதியற்ற முறையிலும் அமைக்கப்பட்டுள்ள கேபிள்கள் ஒழுங்குப்படுத்தப்படுவதுடன், மாநகராட்சிக்கும் வருவாய் கிடைக்கும் என, மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிப்படி, இணையம் மற்றும் டிவி கேபிள்கள், கம்பங்கள் ஆகியவற்றிற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அவ்வாறு, கட்டணம் செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அபராதம் தொடர்பான நிலைக்குழு பரிந்துரைகள், பல தரப்பில் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.
– பிரியா, மேயர், சென்னை மாநகராட்சி
கேபிள்கள் அகற்றப்படாதது ஏன்?
இதற்கு முன் வழங்கப்பட்ட இணைய மற்றும் தொலைகாட்சி கேபிள்களில், காப்பர் உள்ளிட்டவை மறு பயன்பாட்டிற்கு உகந்ததாக இருந்தது. இதனால், அவை பழுதடைந்தாலும், இணைப்பு துண்டிக்கப்பட்டாலும், சம்பந்தப்பட்டவர்களே அவற்றை அகற்றினர். தற்போது பயன்பாட்டில் உள்ள பெரும்பாலான கேபிள்கள் மறுபயன்பாடு செய்ய முடியாது. இதனால், அவை பழுதடைந்ததும், அப்படியே விடப்படுகின்றன. அந்த வகையில் பல கி.மீ., நீளத்துக்கு கேபிள்கள் அலங்கோலமாகவும், வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையிலும் உள்ளன.