குன்றத்தூர் அருகே தொழிற் சாலையில் பயங்கர தீ விபத்து: கெமிக்கல் எரிந்து நாசம்
பல்லாவரம்: குன்றத்தூர் அருகே தனியார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால், அங்கிருந்த கெமிக்கல் எரிந்து நாசமானது. குன்றத்தூர் அடுத்த பழந்தண்டலம், கலைமகள் நகரில் தனியாருக்கு சொந்தமான கெமிக்கல் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் கெமிக்கலை ஆடுகளின் தோல் மீது தடவினால், ஆட்டின் தோல் வழுவழுப்பாக மாறும் என்று கூறப்படுகிறது. அதனால் தோல் பொருட்கள் செய்யும் நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதற்காக இங்கு அதிகளவில் கெமிக்கல் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது.
இந்தநிலையில், நேற்று முன்தினம் மாலை, தொழிற்சாலையில் தீவிபத்து ஏற்பட்டு, கரும்புகை வெளியேறியது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர் முருகேசன், இதுகுறித்து உடனடியாக தாம்பரம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
அதற்குள் அங்கிருந்த கெமிக்கல் தீயில் எரிந்து நாசமானது. இதன் உரிமையாளர் வெளிநாட்டில் இருப்பதால் அவர் வந்த பிறகே தீயில் நாசமான பொருட்களின் மொத்த மதிப்பு எவ்வளவு என்பது தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் சதிச் செயலா என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.