சோழ மண்டலம் அடுக்குமாடி வளாகம் விமான ஆணையம் அனுமதி சான்று
சென்னை:சென்னையில், கவர்னர் மாளியை ஒட்டி, 5 ஏக்கர் நிலம் உள்ளது. மெட்ராஸ் ரேஸ் கிளப் நிறுவனத்திடம் இருந்து, இந்த நிலத்தை சில ஆண்டுகள் முன்பு டி.எல்.எப்., நிறுவனம் வாங்கியது
இங்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அந்நிறுவனம் திட்டமிட்டது. ஆனால், இத்திட்டம் கைவிடப்பட்டது. இந்த நிலத்தை சோழமண்டலம் நிதி நிறுவனத்துக்கு டி.எல்.எப்., நிறுவனம் மார்ச் மாதம் வாங்கியது. அப்போது, 735 கோடி ரூபாய்க்கு இந்த நிலம் கைமாறியதாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலத்தில், தங்களுக்கான தலைமை அலுவலக வளாகத்தை கட்ட சோழமண்டலம் நிதி நிறுவனம் முடிவு செய்தது.
இதன்படி, இங்கு 10 அல்லது 15 மாடி வரையிலான அடுக்குமாடி அலுவலக வளாகம் கட்டப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை விமான நிலையத்தின் சுற்று வட்டாரத்தில், அதிக உயரத்துக்கு அடுக்குமாடி கட்டடங்கள் கட்டும் போது, அதற்கு ஏ.ஏ.ஐ., எனப்படும் இந்திய விமான நிலையங்கள் ஆணையத்திடம் தடையின்மை சான்றிதழ் பெற வேண்டும். இதன் அடிப்படையில் தான் புதிய கட்டுமான திட்டத்துக்கு ஒப்புதல் பெற முடியும்.
எனவே, தற்போது, இந்திய விமான நிலையங்கள் ஆணையத்திடம் இருந்து சோழமண்டலம் நிறுவனம் புதிய கட்டடத்துக்கான தடையின்மை சான்றிதழ் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையடுத்து புதிய கட்டடத்துக்கான கட்டுமான பணிகள் விரைவில் துவங்கும் என நகரமைப்பு வல்லுனர்கள் தெரிவித்தனர்.