விவசாயிகளுக்கு வேளாண் துறை அதிக வருவாய்க்கு மக்காச்சோளம் பயிரிட அழைப்பு

ஊத்துக்கோட்டை, தமிழ்நாடு வேளாண் பல்கலையின் அனைத்திந்திய ஒருங்கிணைந்த ஆராய்ச்சி திட்டம் — மக்காச்சோளம் மற்றும் வேளாண் துறை இணைந்து, மக்காச்சோளம் சாகுபடி தொழில்நுட்ப கருத்தரங்கை நேற்று நடத்தின.

திருவள்ளூர் மாவட்டம், தேர்வாய்கண்டிகை தொழிற்பூங்காவில் உள்ள எஸ்.எல்.பி., எத்தனால் தொழிற்சாலை வளாகத்தில், இக்கருத்தரங்கு நடந்தது.

கருத்தரங்கில் எஸ்.எல்.பி., எத்தனால் தொழிற்சாலை இணை இயக்குநர் ஆர்.சீனிவாசன் பேசியதாவது:

வரும், 2025ம் ஆண்டிற்குள், பெட்ரோலுடன், 20 சதவீதம் எத்தனால் கலக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

வருங்காலத்தில் எத்தனால் தயாரிக்க மக்காச்சோளம் தேவை அதிகமாக இருக்கும். தற்போது, எங்கள் ஒரு நிறுவனத்திற்கு மட்டும் நாள் ஒன்றுக்கு, 500 டன் மக்காச்சோளம் தேவை உள்ளது.

தமிழகத்தில், இதுபோன்ற பல தொழிற்சாலைகள் வர உள்ளன. அதற்கான தேவை மேலும் அதிகரிக்கும். தற்போது, கர்நாடகா, ஆந்திரா, உ.பி., ஆகிய மாநிலங்களில் இருந்து, மக்காச்சோளம் கொள்முதல் செய்யப்படுகிறது.

கோவில்பட்டி, விருதுநகர், திருநெல்வேலி, துாத்துக்குடி ஆகிய பகுதிகளில், எத்தனால் உற்பத்திக்காக பல ஆயிரம் ஏக்கரில், மக்காச்சோளம் பயிரிடப்படுகிறது.

இங்குள்ள விவசாயிகள் மக்காச்சோளம் பயிரிட்டால், மார்க்கெட்டில் உள்ள விலை கொடுத்து, இடைத்தரகர் இன்றி நாங்கள் பெற்றுக் கொள்வோம்.

அதனால், அதிகளவில் மக்காச்சோளம் பயிரிட்டு வருமானம் அடையலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

திருத்தணி, திருவாலங்காடு, ஆர்.கே.பேட்டை ஆகிய பகுதிகளில் இருந்து பங்கேற்ற விவசாயிகளுக்கு, 4,000 மதிப்புள்ள, 8 கிலோ மக்காச்சோள விதை, களைக் கொல்லி, நுண்ணுயிர் உரம்,

நுண்ணுாட்ட சத்து உள்ளிட்டவை அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.

முருக்கம்பட்டு கிராமத்தில், 6 ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிட்டு வருகிறோம். வேளாண் அதிகாரிகள் எங்களை அழைத்து, மக்காச்சோளம் பயிரிடுவது குறித்து, விரிவாகக் கூறினர். தற்போது, 4 ஏக்கரில் நெல் பயிரிட்டு உள்ளேன். மீதமுள்ள நிலத்தில் மக்காச்சோளம் பயிரிட உள்ளேன். வருமானம் அதிகமாக இருந்தால், 6 ஏக்கரிலும் மக்காச்சோளம் பயிரிடுவேன்.

— எஸ்.பாப்பம்மாள், திருத்தணி.

கலந்துரையாடல் நிகழ்ச்சியில், வேளாண் அதிகாரிகள் மக்காச்சோளம் பயிரிடுவது முதல் அறுவடை வரை தெளிவாகக் கூறினர். நாங்களும் பயிரிடுவது மற்றும் அதை விற்பனை செய்வது குறித்து, கேட்டறிந்தோம். வரும் ஜனவரி மாதம் பயிரிட உள்ளேன். வருவாயைப் பொறுத்து தொடர்ந்து பயிரிடுவேன்.

– சி.பெருமாள், ஆர்.கே.பேட்டை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *