உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை மூலம் 15 ரத்த அழுத்த பரிசோதனை கருவிகள்: துணை முதல்வர் வழங்கினார்
சென்னை: சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு பரிசோதனை மேற்கொள்வதற்காக கூடுதலாக உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையின் மூலம் 15 ரத்த அழுத்த பரிசோதனை கருவிகளை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களிடம் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று வழங்கினார்.
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பொதுமக்களின் வீட்டிற்கே நேரடியாக சென்று தொற்றா நோய்களுக்கான பரிசோதனை செய்தல், தேவைப்படும் மருந்துகளை வழங்குதல், தசை சிதைவு, பக்க வாதம் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உடல் உறுப்புகளை இயக்க பயிற்சி அளித்தல் (இயன்முறைச் சிகிச்சை), இயலா நோயாளிகளுக்கு வழங்ககூடிய வலி நிவாரணம், ஆதரவு சிகிச்சை ஆகியவற்றை உள்ளடக்கிய மருத்துவ சேவைகள் அளிக்கப்பட்டு வருகின்றது.
சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ஜாம்பஜார், லாயிட்ஸ் காலனி, திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், கிருஷ்ணாம்பேட்டை ஆகிய 5 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. சேப்பாக்கம் – திருவல்லிக்கணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் ஒரு பிசியோதெரபிஸ்ட், 10 செலிலியர்கள், 20 பெண் சுகாதார தன்னார்வலர்கள் பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர்.
சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உயர் ரத்த அழுத்த பாதிப்புக்குள்ளான 45,303 நோயாளிகள், 15,700 சர்க்கரை நோயளிகள், ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் என இரண்டு நோய்களாலும் பாதிப்புக்குள்ளான 19,005 நோயாளிகள், தசை சிதைவு, பக்க வாதம் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட 180 நபர்களுக்கும் என மொத்தம் 80,188 நபர்களுக்கு மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் தொடர் சிகிச்சை மற்றும் மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட் பட்ட பகுதிகளில் உள்ள 5 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் ”மக்களைத்தேடி மருத்தும்” திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு பரிசோதனை மேற்கொள்வதற்காக கூடுதலாக உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையின் மூலம் 15 ரத்த அழுத்த பரிசோதனை கருவிகளை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களிடம் வழங்கினார்.