2 மணி நேரம் மின்தடை இருளில் தவித்த போலீசார்
சென்னை, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில், 104 காவல் நிலையங்கள் உள்ளன.
அவற்றில் பெரும்பாலான காவல் நிலையங்களில், மின்தடை நேரத்தில் தொடர்ந்து மின் சாதனங்கள் இயங்குவதற்கென ஜெனரேட்டரோ அல்லது யு.பி.எஸ்., கருவியோ கிடையாது.
இதனால் மின் தடை ஏற்படும்போது, காவல் நிலையத்தில் பணிபுரிவோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
அந்த வகையில், நேற்று இரவு அண்ணா சாலை காவல் நிலையத்தில் மின்தடை ஏற்பட்டது. இதனால், இரண்டு மணி நேரம் வேறுவழியின்றி மொபைல் போன் டார்ச் வெளிச்சத்தை பயன்படுத்தி, போலீசார் தங்களது பணிகளை மேற்கொண்டனர்.
மின் தடையால் வழக்கு விசாரணைக்கு வந்தோரிடம் விசாரிக்க முடியாமலும், புகார் கொடுக்க வந்தோரிடம் புகாரை வாங்க முடியாமலும், போலீசார் சிரமப்பட்டனர்.
மின்தடை ஏற்பட்டாலும் தொடர்ந்து மின் சாதனங்கள் இயங்கும் விதமாக ஜெனரேட்டர் அல்லது யு.பி.எஸ்., கருவி பொருத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.