ஆலந்துாரில் ஒன்றரை ஆண்டுகளாக கிடப்பில் மண்டல அலுவலகம் கட்டும் பணி தவிப்பு

ஆலந்துார் மண்டல அலுவலகம் ஆலந்துார், புதுத்தெருவில் இயங்கி வந்தது. அந்த இடம் மெட்ரோ ரயில்வே திட்டப் பணிகளுக்கு தேவைப்பட்டதால், அலுவலக கட்டடத்தை இடிக்கும் சூழல் ஏற்பட்டது.

இதையடுத்து, மண்டல அலுவலகத்திற்கு, அருகிலேயே இடம் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து, கிண்டி, அருளயம்பேட்டை, டேன்சிட்கோ பிளாக்- – 2ல் உள்ள கார்மென்ட்ஸ் வளாகத்தில், கடந்த ஆண்டு ஆக., மாதம் முதல் ஆலந்துார் மண்டல அலுவலகம் செயல்பட துவங்கியது.

ஆலந்துார் மண்டலத்திற்கு உட்பட்டோர், மாநகராட்சி சார்ந்த அனைத்து விண்ணப்பங்களும் பெற, கிண்டியில் உள்ள ஆலந்துார் மண்டல அலுவலகம் செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர்.

இந்நிலையில், ஆலந்துார் புதுத்தெருவில் உள்ள அரசு இடம், குத்தகை காலம் முடிந்து ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது.

கடந்த ஆண்டு இறுதியில், அங்கிருந்த கட்டடங்கள் முழுமையாக அகற்றப்பட்டன. ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து சுவாதீனம் பெறப்பட்டது.

அதில், ஒரு பகுதி இடத்தில் ஆலந்துார் மண்டல அலுவலகம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் உத்தரவுப்படி, 1.10 ஏக்கர் நிலம் ஒதுக்கி அனுமதியளித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, அந்த இடத்தில் ஆலந்துார் மண்டல அலுவலகம், பேரிடர் மீட்பு மைய அலுவலகம், மாநகராட்சி தெற்கு மண்டல துணைக் கமிஷனர் அலுவலகம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதற்காக, 58 கோடி ரூபாய் மதிப்பில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, அடுக்குமாடி கட்டடங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

அந்த இடத்தை, சில மாதங்களுக்கு முன், மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் நேரில் பார்வையிட்டு, விரைவில் பணிகள் துவக்கப்படும் என, தெரிவித்தார்.

ஆலந்துார் தொகுதியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து, தொகுதி எம்.எல்.ஏ.,வும் அமைச்சருமான அன்பரசன் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

அதிலும், மண்டல அலுவலகம் அமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. ஆனால், இன்று வரை எந்த பணியும் நடக்கவில்லை.

ஆலந்துார் மண்டல நலச்சங்கத்தினர் கூறியதாவது:

ஆலந்துார் கத்திப்பாரா மேம்பாலம் அருகில் மண்டல அலுவலகம் இருந்தது வசதியாக இருந்தது. தற்போது, கிண்டி தொழிற்பேட்டைக்குச் செல்ல வேண்டும். அங்கு செல்ல, போதிய பேருந்து வசதி இல்லை.

அதனால், இருசக்கர வாகனம், ஆட்டோ பிடித்து சிரமப்பட்டு செல்ல வேண்டியுள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, இப்பிரச்னை நீடிக்கிறது.

எனவே, ஆலந்துாரில் ஒதுக்கப்பட்ட இடத்தில், விரைவில் மண்டல அலுவலகம் கட்டப்பட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

-நமது நிருபர் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *