ரயிலில் தள்ளி பெண் கொலை வழக்கில் டிச., 27ல் தீர்ப்பு

சென்னை, ஆலந்துார் காவல் குடியிருப்பைச் சேர்ந்தவர்மாணிக்கம். இவரது மனைவி ராமலட்சுமி, ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்தார்.

இவர்களது மூத்த மகள் சத்யா, 20, தி.நகரில் உள்ள தனியார் கல்லுாரியில், பி.சி.ஏ., 3ம் ஆண்டு படித்து வந்தார்.

இவர், அதே பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற எஸ்.ஐ., தயாளன் என்பவரின் மகன் சதீஷ், 31, என்பவரை காதலித்து வந்தார்.

பெற்றோர் கண்டித்ததால் சத்யா, திடீரென காதலை கைவிட்டார். இதில் ஆத்திரமடைந்த சதீஷ், 2022 அக்., 13ல், கல்லுாரி செல்ல, பரங்கிமலை ரயில் நிலையத்தில் காத்திருந்த சத்யாவை, அவ்வழியே வந்த ரயில் முன் தள்ளி படுகொலை செய்தார்.

இதையறிந்து, துக்கம் தாங்காமல் மாணவியின் தந்தை மாணிக்கம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

சத்யா கொலை வழக்கு தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்தி, சதீஷை கைது செய்தனர்.

விசாரணை முடிந்த நிலையில், சதீஷ் மீது கடந்தாண்டு ஜன., 11ல் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

பின், இந்த வழக்கு, சென்னை அல்லிகுளத்தில் உள்ள மகளிர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கில், போலீசார் தரப்பில் ஆஜராக, ஏ.எம்.ரவீந்திரநாத் ஜெயபால் என்பவர், அரசு சிறப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். வழக்கில், அரசு தரப்பு சாட்சிகள் 70 பேரிடம் விசாரிக்கப்பட்டது.

வழக்கில், அனைத்து தரப்பு விசாரணைகளும் நிறைவடைந்த நிலையில், வரும் 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என, நீதிபதி ஜெ.ஸ்ரீதேவி அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *