மது போதையில் பஸ் முன் பாய்ந்த வாலிபர்
செங்குன்றம், சென்னை அருகே செங்குன்றம் ஜி.என்.டி., சாலையில், செங்குன்றம் காவல்நிலையம் அருகில், நேற்று இரவு 7:30 மணியளவில் மதுபோதையில் இருந்த வாலிபர் ஒருவர், சாலையில் வந்து செல்லும் பஸ், லாரி மற்றும் கார் முன் பாய்ந்து சாகப் போகிறேன் என ரகளை செய்தார்.
தனியார் பேருந்து முன் விழுந்த வாலிபர் தலையில் காயமடைந்தார்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசாரும் போதை ஆசாமியை கெஞ்சாத குறையாக அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். வாலிபர் மதுபோதையில் இருந்ததால் அவரை ஆம்புலன்சிலும் ஏற்ற முடியாமல் போலீசார் தவித்தனர்.
ஒருவழியாக வாலிபரை சமாதானப்படுத்தி விசாரித்த போது, அவர் பெயர் காஜாமொய்தீன், 33, என்பதும், கொருக்குப்பேட்டை ஜெ.ஜெ. நகரைசேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து வாலிபரை போலீசார் சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர்.
வாலிபரின் ரகளையால் ஜி.என்.டி., சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.