திட்டமிடலின்றி மேம்படுத்தப்படும் விஜய நகர் பஸ் நிலையம் கவனத்தில் கொள்ளுமா சி.எம்.டி.ஏ.,
சென்னை:வேளச்சேரி, விஜய நகர் பேருந்து நிலையம் 4,800 சதுர அடி பரப்பில் குறுகிய இடத்தில் இயங்கி வரும் நிலையில், அதிகரிக்கும் போக்குவரத்திற்கு ஏற்ப திட்டத்தை செயல்படுத்தாமல், தொலைநோக்கு பார்வையின்றி மீண்டும் அதே இடத்தில் மேம்பாட்டு பணிகளை மேற்கொண்டு வரும் சி.எம்.டி.ஏ.,வின் நடவடிக்கை, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் வேளச்சேரி முக்கிய பகுதியாக உள்ளது. ரயில் நிலையம், பேருந்து நிலையம் அமைந்துள்ளதால், இதர பகுதிகளுக்கு நேரடியாகவும், மாறி செல்லும் பயணியரின் எண்ணிக்கை அதிகம்.
இங்கிருந்து, தாம்பரம், அம்பத்துாருக்கு, 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து இயக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் செம்மஞ்சேரி, கேளம்பாக்கம், திருவான்மியூர், தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி வழியாக, தி.நகர், கோயம்பேடு, கிண்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அந்த வகையில், வேளச்சேரி பேருந்து நிலையத்தை, 2 நிமிடத்திற்கு ஒரு பேருந்து கடந்து செல்கிறது. ஆனால், இந்த பேருந்து நிலையம், விஜயநகரை ஒட்டி சாலையோரத்தில், 4,800 சதுர அடி பரப்பில், கழிப்பறை, நேர காப்பாளர் அறையுடன் இட நெருக்கடியில் அமைந்துள்ளது.
இதில், இரண்டு வரிசையாக, அம்பத்துார் செல்லும் நான்கு பேருந்துகள் நிறுத்த முடியும். தாம்பரம் நோக்கி செல்லும் பேருந்துகள் சாலையோரம் நிறுத்தப்படுகின்ற
பேருந்துகள் குறைப்பு
ஐந்து ஆண்டுகளுக்குமுன், பேருந்து நிலையத்தை ஒட்டி, இரண்டடுக்கு மேம்பாலம் கட்டும் பணி துவங்கியது. இதற்காக, சாலையோரம் நிறுத்தப்பட்டு வந்த வேளச்சேரியில் இருந்து பாரிமுனை, பூந்தமல்லி, பெரம்பூர் ஆகிய இடங்களுக்கு இயக்கப்பட்ட ’21எல், 1ஜி, 54எல், 29என்’ ஆகிய பேருந்துகள் படிப்படியாக குறைக்கப்பட்டன. தற்போது, தினமும் 1, 2 சர்வீஸ் மட்டுமே இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், குறுகிய இடத்தில் உள்ள பேருந்து நிலையத்தை, 3 கோடி ரூபாயில் மேம்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக, பேருந்து நிலையத்தை இடித்துவிட்டு, அம்பத்துார், தாம்பரம் நோக்கி செல்லும் பேருந்துகள் சாலையோரம் நிறுத்தப்படுகின்றன. போக்குவரத்து நெரிசல் அதிகரித்ததால், டி70, 51, 51பி, வி51 போன்ற தடம் எண் கொண்ட பேருந்துகள் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகின்றன. இதனால், பயணியர் இரண்டு, மூன்று பேருந்துகள் ஏறி செல்ல வேண்டி உள்ளதால் மிகவும் சிரமப்படுகின்றனர்.
அதிகரிக்கும் போக்குவரத்திற்கு ஏற்ப திட்டத்தை செயல்படுத்தாமல், மேம்பாட்டு பணிகளை மேற்கொண்டு வரும் சி.எம்.டி.ஏ.,வின் நடவடிக்கை, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடும் நெரிசல்
இது குறித்து, பயணியர் கூறியதாவது:
பாரிமுனை, பூந்தமல்லி, பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு, ஒரே பேருந்தில் பயணித்தோம். தற்போது இரண்டு, மூன்று பேருந்து ஏற வேண்டி உள்ளது. பேருந்து நிலையத்தை இடித்தபின், டி70, 51 தடம் எண் பேருந்துகளும் குறைத்ததால், அதிக நேரம் காத்திருக்க வேண்டியதுடன், நெரிசலில் பயணிக்க வேண்டி உள்ளது.
இந்த பேருந்து நிலையம், 15 ஆண்டுகளுக்குமுன் உள்ள மக்கள் தொகைக்கு ஏற்றது. தற்போதுள்ள வாகன நெரிசலுக்கு உகந்தது இல்லை. இதை மேம்படுத்துவதால், இடம் மேலும் குறுகலாகி நெரிசல் அதிகரிக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து, சமூக ஆர்வலரான வேளச்சேரியைச் சேர்ந்த குமாரராஜா கூறியதாவது: விஜய நகர் சந்திப்பில், சாலையோரம் காலி இடமாக இருந்ததால், அதை பேருந்து நிறுத்த பயன்படுத்தி, நாளடைவில் நிலையமாக மாறியது. வேளச்சேரி ரயில் நிலைய தெற்கு பகுதியில், பேருந்து நிலையம் அமைக்க 6 ஏக்கர் இடம், 10 ஆண்டுகளுக்குமுன்பே ஒதுக்கப்பட்டது.வேளச்சேரி ரயில் நிலையம் வடக்கு பகுதியில், 2 ஏக்கர் இடத்தில் பேருந்து நிலையம் அமைத்து, அதற்கு ஈடாக 6 ஏக்கர் இடத்தில், 2 ஏக்கர் இடத்தை ரயில்வேக்கு மாற்றி கொடுக்க வலியுறுத்த வேண்டும் என, பல ஆண்டுகளாக, எம்.பி., – எம்.எல்.ஏ., கவுன்சிலர்களிடம் வேளச்சேரி மக்கள் முறையிட்டனர்.
அவர்கள் தலையிடாததால், வடக்கு பகுதி 2 ஏக்கர் இடத்தை ரயில்வே நிர்வாகம் உணவு விடுதி நடத்த தனியாருக்கு விட்டது. தரமணி சாலையில், தனியார் பேருந்துகள் நிறுத்தும் அரசு இடத்தில் பேருந்து நிலையம் அமைக்கவும் கூறினோம். தொலைநோக்கு பார்வையுடன் அணுகாமல், தற்காலிக நடவடிக்கையாக எடுத்துள்ளனர். இதனால், நெரிசலும் அதிகரிக்கும். பயணிகள் மிகவும் சிரமப்படுவர்.
தி.நகர் பேருந்து நிலையத்தைவிட அதிகமான பேருந்துகள் வேளச்சேரியில் இயக்கப்படுகிறது. குறுகிய இடத்தை மேம்படுத்தினால், மேலும் குறுகலாக மாறிவிடும்; நெரிசல் அதிகரிக்கும். ரயில் நிலையத்தை ஒட்டி பேருந்து நிலையம் அமைத்தால், பயணியர் பல்வேறு வகைகளில் பயனடைவர். மேம்படுத்தும் திட்டத்தை, சி.எம்.டி.ஏ., செய்வதால், எங்கள் துறையால் தலையிட முடியவில்லை.
அதிகாரிகள்,போக்குவரத்து துறை.