திருநின்றவூர் சாலை விரிவாக்கம் அகலத்தை குறைத்து பணி துவக்க முடிவு

சென்னை:பாடி – திருநின்றவூர் சாலை விரிவாக்க திட்டத்தின்கீழ், தேவைக்கேற்ப அகலத்தை, 80 அடிவரை குறைத்து பணியை துவங்க அரசிடம், நெடுஞ்சாலைத்துறை அனுமதி கேட்டுள்ளது.

சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதியாக, பாடி – திருநின்றவூர் இடையே, 22 கி.மீ., சாலை உள்ளது. இந்த சாலை, மாநில நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பில் உள்ளது. இதை, 50 அடி அகலத்தில் உள்ள சாலையில், 120 அடி அகலத்தில் ஆறுவழி சாலையாக மாற்ற, 2010ம் ஆண்டு அரசு திட்டமிட்டது.

வணிகர்கள், கட்டட உரிமையாளர்கள் எதிர்ப்பு மற்றும் வழக்கு காரணமாக பணியை துவக்குவதில் தாமதம் ஏற்பட்டது. கடந்த 2013ம் ஆண்டு பணிகள் துவங்கப்பட்டு, அரைகுறையாக நிறுத்தப்பட்டது.

தற்போது, இச்சாலையை விரிவாக்கம் செய்ய, 340 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியுள்ளது. பாடி, மண்ணுார்பேட்டை, அம்பத்துார் உள்ளிட்ட பகுதிகளில் வர்த்தக கடைகள், நிறுவனங்கள் பெருகியுள்ளது.

போக்குவரத்து நெரிசல் காரணமாக, இச்சாலையை பயன்படுத்துவோர் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நிலத்தின் மதிப்பும் வேகமாக உயர்ந்து வருகிறது. நிலம் கையகப்படுத்தும் பணிக்கு மட்டும், 152 கோடி ரூபாய் செலவிடப்படவுள்ளது.

நீண்ட நாட்களாக கிடப்பில் உள்ள இந்த சாலை பணியை தொடர, நெடுஞ்சாலைத்துறையினர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதன் ஒருபகுதியாக அம்பத்துார் ரயில்வே மேம்பாலம், இருபுறமும் கூடுதலாக கட்டுமானம் செய்யப்பட உள்ளது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்கு 15 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

ரயில்வே தண்டவாளங்கள் கடக்கும் இடத்தில், பணிகளை தெற்கு ரயில்வே மேற்கொள்ள வேண்டும். இதற்காக, நிதி ஒதுக்கி பணிகளை மேற்கொள்ளும்படி, நெடுஞ்சாலைத்துறை வாயிலாக கேட்கப்பட்டு உள்ளது. ஆனால், தெற்கு ரயில்வே இதுகுறித்து

முடிவெடுக்காமல் உள்ளது.

இந்நிலையில், நெடுஞ்சாலைத்துறையின் சென்னை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு கண்காணிப்பு பொறியாளர் செல்வகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர், அம்பத்துார் ரயில்வே மேம்பாலம் மற்றும் பாடி-திருநின்றவூர் சாலையை சில நாட்களாக ஆய்வு செய்து வருகின்றனர்.

சாலை விரிவாக்க பணிக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி மற்றும் நில எடுப்பு செலவை குறைக்க, புதிய திட்டம் கையில் எடுக்கப்பட்டு உள்ளது. இதற்காக, ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ள சாலையின் அகலத்தை, தேவைக்கேற்ப, 100, 90, 80 அடி வரை குறைத்து பணிகளை துவங்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இதற்கு அரசின் அனுமதியும் கோரப்பட்டுள்ளது. அரசு அனுமதி கிடைத்தவுடன், ஜனவரி மாதம் பணிகளை துவங்கி 18 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *